"நானும் தமிழ் பேஷுவேன்".. கலகலப்பாக்கிய விவேக் ராமசாமி!
Sep 26, 2023,06:20 PM IST
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் என்று கூறி வாழ்த்து தெரிவித்த வேலூரைச் சேர்ந்த தமிழரிடம், "நானும் தமிழ் பேஷுவேன்.. பாலக்காடு தமிழ்" என்று கூறி அவரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார் விவேக் ராமசாமி.
குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் விவேக் ராமசாமி. இந்த வேட்டையில் இவர் வெல்வதற்கு டொனால்ட் டிரம்ப் என்ற பெரும் தடையை தாண்டி வர வேண்டும். ஆனால் தாண்டி வந்து விடுவார் என்று பலரும் நம்புகிறார்கள்.
விவேக் ராமசாமியின் பூர்வீகம் இந்தியாவாகும். கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை கணபதி ராமசாமி, கோழிக்கோடு என்ஐடியில் படித்தவர். தாயார் மருத்துவர். இவர்கள் அமெரிக்காவில் செட்டிலான பிறகு அங்கு பிறந்தவர் விவேக் ராமசாமி.
இந்த நிலையில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவரிடம் வேலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உரையாடினார். உங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்தேன் என்று கூறிய அவர் நானும் தமிழ்நாடுதான் என்று கூறி வேலூர் என்றார். இதைக் கேட்ட விவேக் ராமசாமி உற்சாகமாகி "நானும் தமிழ் பேஷுவேன்.. ஆனால் பாலக்காடு தமிழ்" என்று கூறி சிரித்தார். அவர் தமிழில் பேசியதைக் கேட்டதும் வேலூர்க்காரர் உற்சாகமாகி விட்டார்.
விவேக் ராமசாமி ரொம்ப சீரியஸான ஆள் போல என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென வி.கே. ராமசாமி போல கேஷுவலாகவும் பேசி கலக்கி விட்டார் . அவர் பேசிய இந்தத் தமிழுக்கு நிச்சயம், அமெரிக்கா வாழ் தமிழ் சமூகத்தினர் பலர் அவருக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.