இஸ்ரேலை தாக்கினால் சும்மா இருக்க மாட்டோம்.. ஈரானுக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை

Su.tha Arivalagan
Apr 13, 2024,09:55 AM IST

வாஷிங்டன்: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பிரைடல் கூறுகையில் இஸ்ரேலை தாக்கினால் அதை பாதுகாக்க அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யும். ஈரானுக்கும் இந்தப் போரில் எந்த வெற்றியும் கிடைக்காது என்று எச்சரித்துள்ளார்.


நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ப்ரோன்களுடன் இஸ்ரேலை தாக்க ஈரான் ஆயத்தமாகி வருவதாக அமெரிக்க உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக ஈரான் இஸ்ரேல் இடையே போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் இஸ்ரேலின் பல்வேறு நிலைகளை தாக்க ஆயத்த நிலையில் ஈரான் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது கவலை அளிப்பதாக உள்ளது. ஆனால் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அந்தப் போரில் அது வெல்வது மிக மிகக் கடினம். இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யும். ஈரானின் எந்த ஒரு திட்டமும் வெற்றியில் முடிவடையாது. எனவே இஸ்ரேலை தாக்கும் எண்ணத்தையும் திட்டத்தையும் ஈரான் கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.




ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவலால் இஸ்ரேல் முழு அளவில் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முழு உஷார் நிலையில்  ராணுவம் இருக்குமாறு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரான் தூதரக கட்டிடம் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் பல இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில் இரண்டு முக்கிய ராணுவ தளபதிகளும் அடக்கம் . இதனால் ஈரான் கடும் கோபத்தில் உள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணம் இஸ்ரேல்தான் என்று ஈரான்  குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேலை பழிவாங்க அது திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் மீது சிறிய அளவிலான தாக்குதல் ஒன்றை நடத்த ஈரான் திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது.


ஈரான் தாக்குதல் திட்டம் குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ஈரானின் திட்டம் உண்மையானதாக இருக்கக்கூடும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம். நிச்சயமாக தாக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இஸ்ரேலுக்கும் இது தொடர்பாக நாங்கள் எச்சரிக்கை வழங்கியுள்ளோம். இஸ்ரேல் முழு அளவில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா நிச்சயம் அனைத்து உதவிகளையும் செய்யும். இந்த பதட்டத்தை தணிக்க தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.


ஏற்கனவே இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே வெடித்த போரால் பெரும் பதட்டமும் ஆயிரக்கணக்கான பேரின் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த காசா பகுதிக்குள் நுழைந்து துவம்சம் செய்து விட்டது இஸ்ரேல். அந்த நகரம் வாழத் தகுதியற்ற அளவுக்கு மிகப்பெரும் சேதத்தையும் சந்தித்துள்ளது. ஹமாஸ் இஸ்ரேல் இடையிலான போரின்போது ஈரானும் ஹமாஸ் அமைப்புக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் பல்வேறு உதவிகளை செய்தது. இதனால் ஆவேசம் அடைந்த இஸ்ரேல் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து வந்தது. இந்த நிலையில் தான் டமாஸ்கஸ் நகரில் நடந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேல் கடும் கோபத்தை அடைந்துள்ளது. இதனால் மீண்டும் ஒரு போர் உருவாகுமா? என்ற அச்சமும் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.