ஜோ பைடனின் உக்ரைன் டிரிப்.. அதிகாலை ரகசிய விமானம்.. 10 மணி நேரம் ரயில் பயணம்..!

Su.tha Arivalagan
Feb 21, 2023,01:02 PM IST
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்குப் பயணமானது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. படு ரகசியமாக அவரது பயணத்தை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளது அமெரிக்கா.

திங்கள்கிழமை காலை திடீரென போர் பாதித்த உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஜோ பைடன் தென்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவர் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டதை மிக மிக ரகசியமாக வைத்திருந்தது அமெரிக்கா.

உக்ரைனுக்கு எப்படி வந்தார் ஜோ பைடன்?.. தொடர்ந்து படியுங்கள்



அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை 4 மணிக்கு விமானப்படையின் போயிங் 757 விமானத்தில் ஏறினார் ஜோ பைடன். வாஷிங்டன் அருகே உள்ள ராணுவ விமானப்படை தளத்திலிருந்து விமானம் கிளம்பியது.

இது அமெரிக்க அதிபர்கள் வழக்கமாக சர்வதேச பயணங்களின்போது பயன்படுத்தும் குட்டி விமானம் ஆகும். வழக்கமாக பைடன் விமானம் ஏறும் இடத்தில் இல்லாமல், வேறு இடத்திலிருந்து இந்த விமானம் கிளம்பியது. இந்த விமானத்தின் அனைத்து ஜன்னல்களிலும் கருப்பு நிற ஸ்க்ரீன் போட்டு மறைக்கப்பட்டிருந்தது.


ஈரோடு இடைத்தேர்தல்...தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்


பைடனுடன் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர், ஒரு மருத்துவக் குழு, சில ஆலோசகர்கள், 2 பத்திரிகையாளர்களும் உடன் பயணித்தனர். விமானம் உக்ரைன் நோக்கிப் பறக்க ஆரம்பித்தது. இந்த இரு பத்திரிகையாளர்களும் பைடன் எங்கெல்லாம் போகிறாரோ அவர்களும் உடன் செல்வார்கள். பொது நிகழ்ச்சிகள் அனைத்தையும் பதிவு செய்வது இவர்களது வழக்கம். வழக்கமாக கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்டோர் செல்வார்கள். ஆனால் இந்த முறை ஒரு செய்தியாளர், ஒரு புகைப்படக் கலைஞர் மட்டுமே பைடனுடன் சென்றனர்.

அந்த பெண் நிருபரின் பெயர் சபரீனா சித்திக்கி. இவர் தி வால்ஸ்ட்ரீட் இதழில் பணியாற்றுபவர்.  அதிகாலை 2.15 மணிக்கே இவரை விமான நிலையத்துக்கு வரவழைத்து விட்டனர். பைடனுடன் போர் முனைக்குச் செல்வதை அறிந்து சபரீனாவுக்கு திரில் ஆகி விட்டதாம்.  அவர்களிடமிருந்து செல்போன்கள் வாங்கி வைக்கப்பட்டு விட்டன. பைடன் பயணம் முடிந்த பிறகே திரும்பத் தரப்படும் என்றும் கூறப்பட்டதாம்.  அதை விட சஸ்பென்ஸ் என்னவென்றால் தாங்கள் அதிபருடன் பயணிக்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையாம். 

வாஷிங்டனில் கிளம்பிய அந்த விமானம் ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டீன் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்துக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தது. விமானம் தரையிறங்கியும் கூட நீண்ட நேரம் யாரும் வெளியில் வரவில்லை.  நீ ண்ட நேரம் கழித்தே விமானத்திலிருந்து அனைவரும் இறங்கினர். அடுத்து போலந்து செல்லும் விமானத்தில் அனைவரும் ஏறிக் கொண்டனர். இந்த விமானம் ரெஸ்கோ - ஜெசோனிகா விமான நிலையத்தில் வந்து இறங்கியது. உக்ரைன் போர் தொடங்கியது முதல் இந்த விமான நிலையத்தை தற்போது அமெரிக்கா தலைமையிலான படையினர்தான் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

சபரீனாவும், புகைப்படக் கலைஞர் இவான் வுச்சியும் இந்த இடத்திற்கு வரும் வரை அதிபர் பைடனைப் பார்க்கவில்லை. இங்கு வந்த பிறகுதான் பைடனை சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்குத் தரப்பட்டதாம். விமான நிலையத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு மிக மிக அமைதியான ஒரு வாகன அணிவகுப்பில் அதிபர் செல்ல, அவருடன் இவர் ளும் சென்றுள்ளனர். மிக மிக வித்தியாசமான காட்சியாக இது இருந்தது என்று சொல்கிறார் சபரீனா. 

பிரெஸ்மைசில் குளோனி என்ற ரயில் நிலையத்துக்கு அதிபர் குழு பயணித்தது. மிக மிக பாதுகாப்புடன் இந்தக் குழுவினர் பயணித்தனர். ஒரு அதிபரின் பயணம் போலவே இது தென்படவில்லையாம். உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ளது இந்த ரயில் நிலையம். உள்ளூர் நேரப்படி காலை 9.15 மணி அப்போது. அங்கு ரயிலைப் பிடித்து அதிபர் உள்ளிட்டோர் பயணத்தைத் தொடங்கினர். எட்டுப் பெட்டிகளுடன் கூடிய அந்த ரயிலில் மிக மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பைடன் இந்த பயணத்தை மிக மிக ரசித்தாராம். அவருக்கு பொதுவாகவே ரயில் பயணங்கள் என்றால் ரொம்பப் பிடிக்குமாம்.  செனட்டராக இருந்தபோது அவர் டெலவாரே நகரிலிருந்து வாஷிங்டனுக்கு ரயிலில்தான் அடிக்கடி வருவாராம்.  உக்ரைனுக்கு இதுவரை எந்த ஒரு அமெரிக்க அதிபரும் இப்படிப்பட்ட ரயில் பயணத்தை மேற்கொண்டதில்லை என்பது வரலாற்றில் பதிவாகி விட்டது. கிட்டத்தட்ட 10 மணி நேர பயணத்துக்குப் பின்னர் ஒரு வழியாக  ஜோ பைடன் உக்ரைனுக்குள் வந்து சேர்ந்தார்.

கீவ் நகருக்குள் ரயில் வந்து சேர்ந்தபோது பைடன் உள்பட அனைவருக்குமே அது புது அனுபவத்தையும், கலவையான உணர்வுகளையும் கொடுத்ததாம். அதிபர் பராக் ஒபாமாவுடன், துணை அதிபராக இருந்தபோது ஜோ பைடன் உக்ரைன் வந்துள்ளார். அதன் பின்னர் இப்போதுதான் கீவ் நகருக்கு அவர் வருகை தருகிறார். அமெரிக்க அதிபரின் உக்ரைன் பயணம் இப்படித்தான் நடந்தது என்ற  தகவல்கள் வெளியாகி அமெரிக்காவையும், உக்ரைனியர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.