அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து விலகினார் ஜோ பிடன்.. ஜனநாயகக் கட்சி வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்!

Su.tha Arivalagan
Jul 22, 2024,05:53 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் திடீர் திருப்பமாக, அதிபர் ஜோ பிடன், போட்டியிலிருந்து விலகியுள்ளார். தனக்குப் பதில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.


அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அவர் ஒரு பக்கம் அதி வேகமாக செயல்பட்டு வரும் நிலையில் மறுபக்கம், ஜனநாயகக் கட்சி சார்பில் களத்தில் நின்றிருந்தார் அதிபர் ஜோ பிடன். ஆனால் அவரது வயோதிகம் அவருக்கு எதிராக மாறியது.


பேச்சுக்களில் தடுமாற்றம், செயல்களில் குழப்பம், தெளிவின்மை, விவாதத்தின் கண் அயர்ந்தது என்று பல்வேறு குழப்பங்களை அவர் சந்திக்க நேரிட்டது. இதனால் ஜோ பிடன் குறித்து  ஜனநாயகக் கட்சியினரே கூட அதிருப்தி அடைந்தனர். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்டோர், ஜோ பிடன் விலக வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வந்தனர்.




இந்த நிலையில்தான் உச்சகட்டமாக பிடனுக்கு கொரோனா பாதிப்பு வந்தது. இதனால் அவர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பெரும்பாலானவர்களின் கருத்தை ஏற்று தற்போது போட்டியிலிருந்து விலகியுள்ளார் ஜோ பிடன். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில், எனதருமை ஜனநாயகக்  கட்சியினரே, போட்டியிலிருந்து விலகி, அதிபராக எனது பதவிக்காலத்தை சிறப்பாக முடிக்க முடிவு செய்துள்ளேன். 2020ம் ஆண்டு நான் வேட்பாளரானபோது, கமலா ஹாரிஸை துணை அதிபர் பதவிக்கு முதல் சாய்ஸாக தேர்வு செய்தேன். அது மிகச் சிறந்த முடிவாக அமைந்தது. 


இப்போது கமலா ஹாரிஸை கட்சியின் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று முன்மொழிகிறேன். ஜனநாயகக் கட்சியினர் அனைவரும்  இணைந்து டிரம்ப்பை தோற்கடிக்க வேண்டும். நம்மால்  இது முடியும். நாம் இதைச் செய்வோம் என்று கூறியுள்ளார் ஜோ பிடன்.