அமெரிக்காவை மிக நீண்ட பூகம்பம் தாக்கும்.. பல ஆயிரம் பேர் பலியாவார்கள்.. பாதிரியாரின் கணிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பைக் கொல்ல முயற்சி நடக்கும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் கணித்திருந்த பாதிரியார் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சிக் கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஓக்லஹாமா நகரைச் சேர்ந்தவர் பாதிரியார் பிரான்டன் டேல் பிக்ஸ். இவர் கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் டொனால்ட் டிரம்ப் குறி வைக்கப்படுவார். அவரைக் கொல்ல நடக்கும் முயற்சியில் அவர் மயிரிழையில் உயிர் தப்புவார். அவரது காது அருகே வந்து புல்லட் தாக்கும் என்று கூறியிருந்தார். அப்போது இது பெரிதாக கவனிக்கப்படவில்லை. ஆனால் அவர் சொன்னபடியே தேர்தல் பிரச்சாரத்தின்போது நடந்தது. அவரது காதின் விளிம்பைத் துளைத்துக் கொண்டு குண்டு பாய்ந்தது. இதனால் பாதிரியார் பிக்ஸ் பிரபலமானார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பரபரப்பான கணிப்பை வெளியிட்டுள்ளார் பிரான்டன் டேல் பிக்ஸ். லியோ படத்தில் யோகி பாபுவிடம், விஜய் சொல்வாரே.. என்ன பயமா இருக்கா.. இன்னும் பயங்கரமாக இருக்கும்.. அப்படின்னு.. அந்த மாதிரி இருக்கிறது இப்போது அவர் கூறியுள்ள விஷயம்.
பிக்ஸ் கூறியுள்ள புதிய கணிப்பு இதுதான்:
- அமெரிக்கா முழுவதும் 10 ரிக்டர் அளவில் மிக நீண்ட பூகம்பம் தாக்கும். பல ஊர்களின் வழியாக இந்த பூகம்பம் நீடிக்கும்.
- பூகம்பங்களில் சிக்கி பல ஆயிரம் பேர் பலியாவார்கள்.
- அமெரிக்காவின் முக்கிய நகரங்களை இந்த நிலநடுக்கங்கள் தாக்கும்.
- மிசவுரி, ஆர்கன்சாஸ், டென்னஸ்ஸி, கென்டகி, இல்லினாய்ஸ் நகரங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும்.
- இந்தப் பகுதியில் வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகும். மிகப் பெரிய சேதத்தை சந்திக்கும்.
- நியூ மேட்ரிட் பகுதியில் தாக்கும் பூகம்பத்தால் மிஸ்ஸிஸிப்பி நதியின் போக்கே மாறி வேறு பக்கம் அது பாயும் நிலை ஏற்படும்.
இப்படிக் கூறியுள்ளார் அந்த பாதிரியார். அவரது இந்த கணிப்புகள் அமெரிக்கர்களிடையே பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் விவகாரத்தில் இவர் சொன்னது நடந்ததால் இப்போதும் இது நடக்குமா என்ற அச்சம் கலந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடவுள் சொன்னதாக கூறி இந்த கணிப்புகளை வெளியிட்டுள்ளார் பாதிரியார் பிராண்டன்.
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பே இல்லை - அமெரிக்க புவியியல் மையம்
ஆனால் பிராண்டன் கூறுவது போல நடக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உலக அளவில் நடைபெறும் பூகம்பங்கள், இயற்கைச் சீற்றங்களைக் கண்காணிக்கும் அமைப்பாகவும் இது செயல்படுகிறது.
இந்த அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், 10 ரிக்டர் அளவுகோல் பூகம்பம் அமெரிக்காவைத் தாக்க வாய்ப்பில்லை. மேலும் பாதிரியார் சொன்னபடி நீண்ட தொலைவுக்கு பூகம்பம் தாக்கும் சூழலும் தற்போது இல்லை. அமெரிக்காவில் மட்டுமல்ல, பூமியில் எந்தப் பகுதியிலும் அப்படி ஒரு சாத்தியக் கூறு இல்லை. பூமியில் ஏதாவது பெரிய அளவில் பிரச்சினை ஏற்பட்டால்தான் அதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால் அப்படி ஒரு சாத்தியமும் இப்போது இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் 9.5 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஒன்று கடந்த 1960ம் ஆண்டு சிலியைத் தாக்கியது. அதுதான் உலகிலேயே நீண்ட நெடிய பூகம்பமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 1000 மைல்கள் நீளத்திற்கு இந்த பூகம்பமானது நீடித்தது. இதுபோன்ற பூகம்பம்தான் அமெரிக்காவைத் தாக்கப் போவதாகத்தான் பிராண்டன் கூறியுள்ளார்.
நாஸ்டிரடாமஸ் - பாபா வங்கா கணிப்பு
ஏற்கனவே பிரெஞ்சு கணிப்பாளர் நாஸ்டிரடாமஸ், இந்த ஆண்டு பூமியை ஒரு பெரிய விண் கோள் தாக்கும், பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளார். அதேபோல பாபா வங்காவும் பூமியை மிகப் பெரிய இயற்கைப் பேரிடர் தாக்கும் என்று கணித்துள்ளார். அதிலும் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையோரம் மிகப் பெரிய அளவில் பூகம்பம் தாக்கும், எரிமலைகளும் வெடிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
அந்த வகையில் இப்போது பிராண்டனின் கணிப்பும் சேர்ந்துள்ளதால், ஒரு வேளை அப்படியும் நடந்திருமோ என்ற அச்சம் அமெரிக்கர்களிடையே எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்