அதாச்சு 50 வருஷம்.. நிலவுக்குள் மீண்டும் காலெடுத்து வைத்த அமெரிக்கா.. அதுவும் எந்த இடத்தில் பாருங்க!
Feb 23, 2024,10:35 AM IST
வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்கலம் ஒன்று நிலவில் தரையிறங்கியுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா.. கிட்டத்தட்ட 50 வருடங்கள் கழித்து நிலவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது அமெரிக்கா.
நிலவுக்குப் போன முதல் நாடே அமெரிக்காதான். அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம்தான் நிலவில் தரையிறங்கிய முதல் விண்கலம். நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதனும் அமெரிக்கர்தான். நீல் ஆம்ஸ்டிராங்க்தான் அந்த பெருமைக்குரிய சாதனையாளர். 1969ம் ஆண்டு நடந்த சாதனை அது. அதன் பின்னர் 1972ம் ஆண்டு வரை அமெரிக்காவின் நிலவுப் பயணம் தொடர்ந்தது.
இருப்பினும் இதுவரை ஆம்ஸ்டிராங்கைத் தவிர வேறு எந்த மனிதனும் நிலவில் நுழைந்ததில்லை. அவர் மட்டுமே முதலும் கடைசியுமாக இருக்கிறார். அதன் பிறகு பல நாடுகள் நிலவில் நுழைய முயற்சி மேற்கொண்டன. அதில் பெரும்பாலான முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. இதுவரை நிலவில் நுழைந்த பெருமை கொண்ட நாடுகள் வரிசையில் சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகியவை மட்டுமே உள்ளன.
இதில் இந்தியாவின் சாதனை மகத்தானது. யாருமே நுழைந்திராத தென் நிலவின் தரைப் பரப்பில் இந்தியா தனது விண்கலத்தை இறக்கி புதிய வரலாறு படைத்தது. தென் நிலவில் இதுவரை எந்த நாடும் நுழைந்ததில்லை. அந்த சாதனையை இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிகழ்த்தியது. இப்போது அதே தென் நிலவில்தான் அமெரிக்கா தனது விண்கலம் ஒன்றை இறக்கியுள்ளது.
ஹூஸ்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அனுப்பிய "ஓடிஸிஸ்" விண்கலத்தின் லேன்டரானது, நிலவின் தென் பரப்பில் இறங்கியுள்ளது. இந்த விண்வெளிப் பயணத்திற்கு நாசாவும் நிதியுதவி செய்துள்ளது. ஆளில்லாத ரோபோட்டுகளால் இயங்கக் கூடிய விண்கலம் இது. அடுத்த பத்து ஆண்டுகளில் இங்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக இந்த ஆளில்லாத விண்கலத்தை அனுப்பி சோதித்துள்ளது அமெரிக்கா.
பால்கன் 9 ராக்கெட் மூலம் ஒடிஸிஸ் விண்கலமானது பிப்ரவரி 15ம் தேதி நிலவுக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. மாலாபெர்ட் ஏ என்ற இடத்தில் இந்த விண்கலமானது தரையிறங்கியுள்ளது. முதலில் விண்கலமானது சரியாக இறங்கி விட்டதா என்பதில் குழப்பம் நிலவியது. ஆனால் தற்போது விண்கலத்திலிருந்து சிக்னல்கள் வருவதாக நாசா உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த பயணம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிக்னல்கள், வலுவாக இல்லை என்றும் பலவீனமாகவே உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. வரும் வரை வரட்டும் என்றும் என்றும் அது தெரிவித்துள்ளது.