அமெரிக்க அதிபர் மனைவிக்கு கொரோனா.. ரத்தாகுமா ஜோ பைடனின் இந்திய பயணம்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜோ பைடனின் இந்திய பயணம் ரத்து செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் செப்டம்பர் 7 ம் தேதி துவங்கி ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஜி20 மாநாட்டில் தான் நிச்சயம் கலந்து கொள்ள உள்ளதாக ஜோ பைடன் உறுதியாக தெரிவித்திருந்தார். அவர் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன.
இந்நிலையில் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு லேசான காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் காணப்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஜோ பைடனுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆவால் அவருக்கு கொரோனா தொற்று நெகடிவ் என வந்துள்ளது.
இருந்தாலும் அமெரிக்க அதிபரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஜோ பைடனின் இந்திய பயணம் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சீன அதிபர் ஜின்பிங் மாநாட்டுக்கு வர மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு அவருக்குப் பதில் அந்த நாட்டின் பிரதமர் பங்கேற்கவுள்ளார். ரஷ்ய அதிபரும் வருவது சந்தேகம்தான். இந்த நிலையில் ஜோ பைடன் வருகையிலும் சந்தேகம் எழுந்துள்ளதால் சலசலப்பு நிலவுகிறது.