அமெரிக்காவில் உயர் கல்வி படிக்க ஆசையா?.. ஆக. 17ல் எஜுகேஷன் யுஎஸ்ஏ கண்காட்சி வருது.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: அமெரிக்காவில் உயர்கல்வி பயில்வது குறித்த எஜுகேஷன் யுஎஸ்ஏ கண்காட்சியை ஆகஸ்ட் 17 அன்று சென்னையில் அமெரிக்க துணைத் தூதரகம் நடத்துகிறது.
அமெரிக்க உயர்கல்வி குறித்த அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ தகவல் அமைப்பான எஜுகேஷன் யுஎஸ்ஏ (EducationUSA), ஆகஸ்ட் 16, 2024 அன்று ஹைதராபாத்தில் தொடங்கி ஆகஸ்ட் 25 அன்று புது தில்லியில் முடிவடையும் வகையில், கல்வி சார்ந்த எட்டு நிகழ்வுகளை நாடு முழுவதும் நடத்துகிறது. சென்னையில் ஆகஸ்ட் 17 அன்று ஹோட்டல் ஹில்டனில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.
இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், அமெரிக்கா முழுவதிலும் உள்ள 80-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். பங்கேற்புக் கட்டணம் இல்லை, ஆனால் பதிவு செய்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கும் பதிவு செய்துகொள்வதற்கும் இந்த இணைப்புக்குள் சென்று பார்க்கலாம்.. https://bit.ly/EdUSAFair24Emb
இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி கூறுகையில், “எஜுகேஷன் யுஎஸ்ஏ கண்காட்சிகள் அமெரிக்கா வழங்கும் அற்புதமான கல்வி வாய்ப்புகள் குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கான சிறந்த வழியாகும். நீங்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை அல்லது வணிகம் ஆகிய எந்தத் துறையில் ஆர்வம் கொண்டவராக இருந்தாலும், உங்கள் கனவுகளை அடைவதற்கு உதவக்கூடிய படிப்பு இங்கு உள்ளது. பெரிய அளவிலான அமெரிக்கக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கும் கல்லூரி விண்ணப்பம் மற்றும் விசா செயல்முறை பற்றிய தகவல் அமர்வுகளில் கலந்துகொள்வதற்குமான வாய்ப்புகளை இந்நிகழ்வுகள் வழங்குகின்றன.
சேர்க்கைகள், உதவித்தொகைகள், வளாக வாழ்க்கை மற்றும் அமெரிக்காவில் கல்வி பெறுவது குறித்த பல தகவல்களை நீங்கள் இங்கு நேரடியாகப் பெறுவீர்கள். அமெரிக்காவில் பயில்வது குறித்த உங்கள் கனவை நனவாக்குவதற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் உதவிகளையும் மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள்,” என்று கூறினார்.
நிகழ்வில் பங்கேற்கும் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்கள், அமெரிக்கா முழுவதும் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் படிப்புகளில் பல்வேறு கல்வித் திட்டங்களை வழங்குகின்றன. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள், எஜுகேஷன் யுஎஸ்ஏ ஆலோசகர்கள் மற்றும் அமெரிக்க தூதரகப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள், மாணவர்கள் அமெரிக்க உயர்கல்வி பற்றிய தகவலறிந்த தேர்வுகளை மேற்கொள்ளவும், அமெரிக்க மாணவர் விசா விண்ணப்ப செயல்முறையைப் பற்றி அறிந்துகொள்ளவும், அமெரிக்காவில் கல்வி பெறுவது குறித்தும் வாழ்வது குறித்தும் ஆழமான புரிதலைப் பெறவும் உதவும்.
EducationUSA கண்காட்சிகளின் அட்டவணை:
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 16 - ஹைதராபாத், ஹோட்டல் ஐடிசி கோஹினூர், மாலை 04:30 மணி முதல் இரவு 09:00 மணி வரை
சனிக்கிழமை, ஆகஸ்ட் 17 - சென்னை, ஹோட்டல் ஹில்டன், பிற்பகல் 02:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 18 - பெங்களூர், ஹோட்டல் தாஜ், எம்ஜி சாலை, பிற்பகல் 02:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை
திங்கட்கிழமை, ஆகஸ்ட் 19 - கொல்கத்தா, த கிராண்ட் ஓபராய் ஹோட்டல், மாலை 07:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை
புதன்கிழமை, ஆகஸ்ட் 21 - அகமதாபாத், ஹோட்டல் ஹயாத் வஸ்த்ராபூர், மாலை 06:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை
வியாழக்கிழமை, ஆகஸ்ட் 22 -புனே, ஹோட்டல் ஷெராட்டன் கிராண்ட் புனே பண்ட் கார்டன், மாலை 06:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை
சனிக்கிழமை, ஆகஸ்ட் 24 - மும்பை, ஹோட்டல் செயின்ட் ரெஜிஸ், பிற்பகல் 02:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 25 - புது டெல்லி, த லலித் ஹோட்டல், பிற்பகல் 02:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை
இந்தியாவில் எஜுகேஷன் யுஎஸ்ஏ:
எஜுகேஷன் யுஎஸ்ஏ என்பது 175-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 430-க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் ஆலோசனை மையங்களைக் கொண்ட அமெரிக்க அரசுத் துறை அமைப்பு ஆகும். இந்தியாவில், டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் (2) ஆகிய ஐந்து நகரங்களில் உள்ள ஆறு மையங்கள் மூலம் எஜுகேஷன் யுஎஸ்ஏவின் ஆலோசனை சேவை வழங்கப்படுகிறது.
www.educationusa.in தளத்தில் மேலும் அறிந்துகொள்ளலாம் அல்லது india@educationusa.org மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளலாம். அமெரிக்காவில் உள்ள அங்கீகாரம் பெற்ற மேல்நிலைக்கு பிறகான கல்வி நிறுவனங்களில் கல்வி பெற விரும்பும் மாணவர்களுக்கு, அமெரிக்க உயர்கல்வி குறித்த மிகவும் புதுப்பிக்கப்பட்ட, துல்லியமான மற்றும் விரிவான தகவல்களை எஜுகேஷன் யுஎஸ்ஏ வழங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்