என்ன கொடுமை கைலாசா!?.. நித்தியானந்தாவின் "நாட்டை அங்கீகரித்த" அமெரிக்க நகரம்!
Jan 13, 2023,02:03 PM IST
நெவார்க்: அமெரிக்காவின் நெவார்க் நகரத்துடன், நித்தியானந்தாவின் கைலாசா நாடு ஒப்பந்தம் போட்டுள்ளதாக நித்தியானந்தா டிவீட் போட்டுள்ளார்.
நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. தனியாக கைலாசா என்ற நாட்டை உருவாக்கி விட்டதாக கூறியுள்ள அவர் சமூக வலைதளங்களில்தான் வலம் வருகிறார். அடிக்கடி டிவீட்டும், வீடியோவும் போட்டு அதில்தான் உலா வந்து கொண்டிருக்கிறார்.
அவர் உருவாக்கியுள்ள கைலாசா எங்கிருக்கிறது என்று கூட யாருக்கும் தெரியவில்லை. அது இந்தியாவிலேயேதான் எங்கேயோ இருக்கிறது என்று கூறுவோரும் உண்டு. ஏதோ ஒரு தீவில் உட்கார்ந்து கொண்டு கதை கட்டிக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தா என்று கூறுவோரும் உண்டு.
இந்த நிலையில் நித்தியானந்தா ஒரு டிவீட் போட்டுள்ளார். அதாவது அமெரிக்காவின் நெவார்க் நகர நிர்வாகம், கைலாசா நாட்டை அங்கீகரித்து அதனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அந்த டிவீட் தெரிவிக்கிறது.
நித்தியானந்தாவின் கைலாசா சார்பில் விஜயப்பிரியா நித்தியானந்தாவும் (இவர் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர பிரதிநிதியாம்), நெவார்க் நகரம் சார்பில் அதன் மேயர் பராக்கவும் கையெழுத்திட்டுள்ளனராம். ஜனவரி 11ம் தேதி இந்த இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக போட்டோவும் போட்டுள்ளார் நித்தியானந்தா.
இதெல்லாம் உண்மையா, உண்மையிலேயே இப்படியெல்லாம் நடந்ததா என்பது குறித்துத் தெரியவில்லை.