மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

Su.tha Arivalagan
Apr 19, 2025,12:26 PM IST

அலிகார்: உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த ஒரு பெண், தனது வருங்கால மருமகனுடன் வீட்டை விட்டு வெளியேறிப் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். தனது கணவரும், மகளும் சேர்ந்து தன்னை மிகவும் டார்ச்சர் செய்ததால்தான் வருங்கால மருமகனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக அந்தப் பெண்மணி கூறியுள்ளார்.


அலிகாரைச் சேர்ந்தவர் சப்னா தேவி. இவரது மகள் சிவானி. ராகுல் என்பவருடன், சிவானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஏப்ரல் 16ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு, ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து வந்தன. இரு வீட்டாரும் உற்சாகமாக கல்யாண வேலைகளைப் பார்த்து வந்தனர். ஆனால் கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருக்கும்போது ஏப்ரல் 8ம் தேதி திடீரென சப்னா தேவியும், ராகுலும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.


இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சப்னா தேவியின் வீட்டிலிருந்து பணமும், நகைகளும் கூட காணவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. சப்னா தேவியின் கணவர் ஜிதேந்திரா குமார்,  போலீஸ் நிலையத்தில் தனது மனைவியைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார்.




சப்னா தேவியையும், ராகுலையும் போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று திடீரென சப்னா தேவியும், ராகுலும் திரும்பி வந்தனர். நேராக காவல் நிலையத்தில் அவர்கள் ஆஜரானார்கள். இதையடுத்து இரு வீட்டாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். போலீஸார் முதலில் சப்னா தேவியுடன் தனியாக கவுன்சிலிங்கில் ஈடுபட்டனர். பின்னர் சப்னா தேவியின் கணவர் மற்றும் மகளுடனும் பேச வைத்தனர். கிட்டத்தட்ட 12 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் தனது குடும்பத்துடன் போக விரும்பவில்லை என்றும், ராகுலுடன் வாழப் போவதாகவும் திட்டவட்டமாக கூறி விட்டார் சப்னா தேவி.


இதையடுத்து வேறு வழியில்லாமல், சப்னா தேவியின் முடிவுக்கே போலீஸார் விட்டு விட்டனர். இதைத் தொடர்ந்து சப்னா தேவி, ராகுலடன் புறப்பட்டுப் போய் விட்டார்.


வீட்டை விட்டு வெளியேறியது ஏன் என்பது குறித்து சப்னா தேவி கூறுகையில், எனது மகளும், கணவரும் என்னை மன ரீதியாக நிறைய துன்புறுத்தியுள்ளனர். இதனால்தான் வெறுத்துப் போய் ராகுலுடன் போய் விட்டேன். இனி ராகுலுடன்தான் எனது வாழ்க்கை என்று கூறியுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து ராகுல் கூறுகையில், நான் தேவியின் வாழ்க்கையைக் காப்பாற்றியுள்ளேன். இருவரும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளோம் என்றார்.


மறுபக்கம், தனது கல்யாணம் நின்றதோடு, தனது தந்தையை கைவிட்டு விட்டு ராகுலுடன் தாயார் போனதால் மனம் உடைந்துள்ளார் சிவானி. இதுகுறித்து அவர் கூறுகையில், ராகுலை நான் ஏப்ரல் 16ம் தேதி  திருமணம் செய்யவிருந்தேன். ஆனால் எனது தாயாரும், ராகுலும் ஓடிப் போய் விட்டனர். திருமணம் நிச்சயமானது முதலே எனது தாயாரும், ராகுலும் செல்போனில் பேசிக் கொண்டே இருப்பார்கள். மணிக்கணக்கில் பேசுவார்கள். வீட்டை விட்டு போகும்போது ரூ. 3.5 லட்சம் பணம் மற்றும் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் எனது தாயார் எடுத்துக் கொண்டு போய் விட்டார். அவர்கள் எப்படியோ போகட்டும். ஆனால் நகை, பணத்தை அவர்கள் திருப்பித் தர வேண்டும் என்று கூறினார்.