வினேஷ் போகத் விவகாரம்.. ரூல்ஸ் இருக்கே.. என்ன பண்றது.. உலக மல்யுத்த சம்மேளன தலைவர் பரபரப்பு பேட்டி!

Su.tha Arivalagan
Aug 11, 2024,10:09 AM IST

பாரிஸ்: வினேஷ் போகத் விவகாரம் குறித்து உலக மல்யுத்த சம்மேளன தலைவர் நேனாட் லாலோவிக் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். நடந்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ள அவர், நாங்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளதே என்றும் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதைப் பார்த்தால் வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது.


வினேஷ் போகத் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று ஒலிம்பிக் மறு பரிசீலனை தீர்ப்பாயத்திடம் முறையிட்டுள்ளார். ஒலிம்பிக் நிறைவு நாளன்று தீர்ப்பு வழங்குவதாக தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. அதாவது 13ம் தேதிதான் தீர்ப்பு வெளியாகும். இந்திய நேரப்படி அன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பாயம் தனது தீர்ப்பை அளிக்கவுள்ளது.




இந்த நிலையில் என்டிடிவிக்கு அளித்துள்ள பேட்டியில் உலக மல்யுத்த சம்மேளன தலைவர் நேனாட் லாலோவிக் பரபரப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள இமெயிலில் கூறியிருப்பதாவது:


நடந்த சம்பவத்திற்காக நான் வருத்தப்படுகிறேன். வினேஷ் போகத்துக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் விதிமுறைகளை நாம் புறக்கணிக்க முடியாது. நாங்கள் இதில் நாடுகளைப் பார்ப்பதில்லை. வீரர்களாக மட்டுமே பார்க்கிறோம். அங்கு விளையாட்டை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். 


எடை சரிபார்ப்பு என்பது பொதுவெளியில் நடப்பது. அனைவருக்குமே தெரியும் அங்கு என்ன நடந்தது என்று. அதில் எந்த ரகசியமும் இல்லை. விதிகளுக்கு மாறாக எடை இருக்கும்போது எப்படி போட்டியிட அனுமதிக்க முடியும். நாங்கள் விதிமுறைகளை கடைப்பிடித்தாக வேண்டுமே.


வீரர்கள், வீராங்கனைகளின் நலனுக்காகவே இந்த எடை விதிமுறை  கொண்டு வரப்பட்டது. போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமானால் வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விதிமுறைக்கு உடன்பட்டாக வேண்டும். விதிமுறைகளில் சில சில மாற்றங்களைச் செய்யலாமே தவிர முழுமையாக அதை ரத்து செய்ய முடியாது என்று அவர் கூறியுள்ளார்.


அவர் கூறுவதைப் பார்த்தால் வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் வெறும் 100 கிராம் எடை அதிகமாக இருந்த ஒரே காரணத்திற்காக பல்வேறு சாதனைகளுடன் வெற்றியை நோக்கி விரைந்து கொண்டிருந்த வினேஷ் போகத்துக்கு ஒலிம்பிக் தீர்ப்பாயம் கருணை காட்டுமா என்ற எதிர்பார்ப்பில் இந்தியர்கள் காத்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்