மனித நேயத்தோடு கூடிய.. மக்களுக்கு உதவக்கூடிய தலைவரை இழந்து விட்டோம்.. நிர்மலா சீதாராமன்

Manjula Devi
Dec 29, 2023,01:56 PM IST

சென்னை: மனித நேயத்தோடு கூடிய, மக்களுக்கு உதவக் கூடிய ஒரு தலைவரை நாம் இழந்து விட்டோம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு ஆறுதல் கூறினார். அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார்.


பின்னர் செய்தியாளர்கலளிடம் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:




கேப்டன் அவர்கள் மறந்த செய்தி கேட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதை தவிர, உடனடியாக நீ மத்திய அரசின் சார்பாக கலந்து கொள். அந்த குடும்பத்தை சந்திக்கணும். அவருடைய தொண்டர்கள் எல்லோரையும் சந்திக்கணும். இந்த துக்கத்தில் நாமளும் பங்கேற்கணும். அங்கேயே இருக்கணும் என அறிவுறுத்தினார். அதனால் உடனடியாக வந்து, மனதுக்கு வேதனை அளிக்க கூடிய இந்த கூட்டத்தில் வந்து கலந்து கொள்கிறேன். 


பிரதமர் ஐயா சார்பில் ஒரு மலர் வளையம் சமர்ப்பித்தேன். கேப்டன் அவர்கள் மக்களுக்காக பாடுபட்டவர். அவர் வீட்டுக்கு வந்த ஒருத்தருக்கு கூட சாப்பாடு இல்லாமல் அனுப்பக்கூடாது என்பதை நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் மனம் இளகின மனம். கஷ்டத்தை பார்க்க முடியாத மனம். அதனால் தன்னோடு இருக்கிற எல்லோருக்கும் கூட தனக்கு கிடைக்கிற அதே வசதி அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என முயற்சி செய்தவர். 


பலமுறை அவருடைய நேர்காணலை நான் பார்த்திருக்கிறேன். அதில் என் டீம்ல எனக்கு கிடைக்கும் வசதி அனைத்தும் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என ஒரு சிஸ்டத்தை ஆரம்பித்தேன் எனக் கூறியவர். நான் சாப்பிடுவதை தான் மற்றவர்களும் சாப்பிட வேண்டும். இதில் பாகுபாடு, வேறுபாடு, ஒன்றும் இருக்காது. என்பதை எடுத்து சொன்னவர். இதனால் ஒரு புதிய வழக்கமே உருவாகி இருக்கிறது. 


உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு விதமான சாப்பாடு, வேலை செய்பவர்களுக்கு வேறு விதமான சாப்பாடு என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் மனிதர்கள் தான். எல்லோரும் கஷ்டப்படுபவர்கள் தான். எல்லோரும் கஷ்டத்தையும் உணர்ந்து அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற மனிதநேயத்தோடு இருந்த ஒரு அரசியல்வாதி. அரசியலில் இந்த மாதிரி மனிதநேயத்தை தினமும் வாழ்க்கை முறையாக கொண்ட அரசியல் தலைவரை இனி நாம் பார்க்க முடியாது. 


அந்த மாதிரி குணம் கொண்ட கேப்டன் விஜயகாந்த் இன்று நம்மிடையே இல்லை. அந்த துக்கத்தை எடுத்துச் சொல்லவும், வர்ணிக்கவும் வார்த்தைகள் இல்லை. பிரேமலதா அம்மாவிடம் நான் சொல்ல முயற்சி பண்ணது இதை நான் எப்படி வெளிக்காட்டுவது என்பது தெரியவில்லை அப்படித்தான் எடுத்து சொன்னேன். இந்த நேரத்தில் வெயிலையும், மழையையும் ,கருத்தில் கொள்ளாமல் கோடான கோடி கேப்டனுடைய ரசிகர்கள், தொண்டர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனை கஷ்டம் ஆனாலும் கடைசி ஒரு முறையாவது அவரைப் பார்த்துவிட்டு போக வேண்டும் என வந்திருக்கிறார்கள். 


அப்படிப்பட்ட தொண்டர்கள் அனைவருக்கும் என்னுடைய துக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்பவில்லை. உங்கள் மனதில் உள்ள அதே துக்கம் தான் எங்க எல்லோரிடமும் உள்ளது. அதே துக்கத்தை பகிர்ந்து கொள்வதற்கு தான் பிரதமர் ஐயா இன்று போக சொல்லி எனக்கு உத்தரவிட்டார். இந்த மாதிரி ஒரு மனித நேயத்தோடு இருக்கக்கூடிய, தன் பணத்தால் மக்களுக்கு உதவக்கூடிய, ஒரு தலைவரை நாம் இழந்து விட்டோம். இந்த துக்கத்தை எடுத்து சொல்லக்கூட வார்த்தை வரவில்லை. அவர் குடும்பத்தாருக்கும், குறிப்பாக சுதீஷ் அவர்களுக்கும், கேப்டன் அவருடைய இரு குமாரர்களுக்கும், பிரேமலதா அம்மாவுக்கும், என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தொண்டர்கள்  அனைவரும் கூட தலைவரை இழந்து விட்டோம் என்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் நிர்மலா சீதாராமன்.