மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின்.. தமிழக பயணம் ரத்து..!
சென்னை: சென்னை ஐஐடியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த சில நாட்களுக்கு முன்னர், தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும், ஏற்க மறுத்தால், தமிழகத்தில் வழங்க உள்ள கல்விக்கான நிதி ரூ.2,152 கோடி வழங்க முடியாது என்றும் கூறியிருந்தார். இந்த மும்மொழி கொள்கை குறித்த சர்ச்சை தற்போது தீவிரமாகியுள்ளது. தமிழகத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மறுபக்கம் தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது. இரு மொழிக் கொள்கை மட்டுமே தமிழகத்தில் பின்பற்றப்படும் எனவும் கூறியிருந்தது. மேலும், மாணவர்கள் நலன் கருதி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதனையடுத்து அரசியல் காரணங்களுக்காக குறுகிய பார்வையுடன் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகவும், கல்வியை அரசியலாக்க வேண்டாம் எனவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொள்வார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது அவரது தமிழகம் வருகை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.