மத்திய பட்ஜெட் 2024 : எகிறும் எதிர்பார்ப்புகள்.. என்னவெல்லாம் தரப் போகிறார் நிர்மலா சீதாராமன்?

Aadmika
Jul 21, 2024,05:10 PM IST

டெல்லி : நாடே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2024-2025 ம் நிதியாண்டிற்கான முழு மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் என்னென்ன எதிர்பார்புகள் இருக்கும் என ஆர்வம் அனைவரிடமும் அதிகரித்து உள்ளது. 


பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22ம் தேதி துவங்குகிறது. இந்த கூட்டத் தொடர்ந்து ஆகஸ்ட் 14 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஜூலை 23ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் ஜூலை 23ம் தேதி மத்திய பட்ஜெட்டை லோக்சபாவில் தாக்கல் செய்ய உள்ளார். இது இவர் தாக்கல் செய்ய உள்ள ஏழாவது பட்ஜெட் உரை ஆகும். மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் என்பதால் இதை நாடே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.


மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே நாட்டின் 2024-2025ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை இரு அவைகளிலும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். லோக்சபாவில் பகல் 1 மணி அளவிலும், ராஜ்யசபாவில் பகல் 2 மணி அளவிலும் பொருளாதார ஆய்வு அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதைத் தொடர்ந்து பகல் 02.30 மணிக்கு மீடியாக்களையும் சந்தித்து, பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் விளக்க உள்ளார். இதைத் தொடர்ந்து வழக்கமான நடைமுறைகளாக ஜூலை 23ம் தேதி காலை ஜனாதிபதியை சந்தித்து பட்ஜெட் உரை தாக்கலுக்கான அனுமதியை பெற்ற பிறகு, பட்ஜெட்டையும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.




மத்திய பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் :


* இந்த பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். 


* வாடிக்கையாளர்கள் அல்லது தனி நபர்களின் வரிகளை குறைக்கும் நோக்கத்தில் இந்த பட்ஜெட் இருக்கும்.


* சரக்கு ஏற்றுமதி சந்தைகள், ரியல் எஸ்டேட், வீட்டு கடன் வழங்கும் நிறுவனங்கள்,ஆட்டோ நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகள் சில சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் இருக்கும்.


* கிராமப்புற திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படலாம்.


* நாட்டில் போதை நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் சிகரெட், புகையிலை ஆகிய போதை வஸ்துக்கள் மீதான வரி 5 முதல் 7 சதவீதம் உயர்த்தப்படலாம்.


* கிராமப்புறங்களுக்கான மானிய விலை வீடு கட்டும் திட்டத்திற்கான வட்டிகள் குறைக்கப்படலாம்.


* எலக்ட்ரானிக் வாகன தயாரிப்புக்களை ஊக்குவிக்கும் விதமாக அவற்றிற்கு அதிக வரிச்சலுகை, மானியங்கள் அறிவிக்கப்படலாம்.


* உற்பத்தி, தொழில்நுட்பம் ஆகிய துறைகளை ஊக்கும் வகையில் பல திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிடப்படலாம்.


* மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வோருக்கான வரிகள் அதிகரிக்கப்படலாம்.


* இடைத்தரகர்களை குறைக்கும் வகையில் பல்வேறு துறைகளில் பல அறிவிப்புக்கள் வரலாம். 


* நடுத்தர குடும்பத்தினர், மாத சம்பளதாரர்களின் சுமைகளை குறைக்கும் வகையில் முக்கிய பொருட்கள், வருமான வரி உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் அல்லது சலுகைகள் பற்றிய அறிவிப்புக்கள் வெளியாகலாம்.


* பல முக்கிய பொருட்களின் மீது ஜிஎஸ்டி குறைக்கப்படலாம்.


* புதிய நவீன ரயில்கள், சாலை மேம்பாடு தொடர்பான அறிவிப்புக்கள் வரலாம்.




எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக உள்ளன. காரணம், 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடும் நெருக்கடிகள், சவால்களுக்கு மத்தியில் பதவியேற்றுள்ளது. எனவே முதல் பட்ஜெட்டை சிறப்பாக சமர்ப்பித்து மக்களின் நம்பிக்கையைப் பெற பிரதமர் மோடி விரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறLு.


ஜூலை 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை அடுத்து, ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளின் பங்குகள், சந்தை நிலவரம் குறித்து நிபுணர்கள் உன்னிப்பாக கவனிக்க துவங்கி உள்ளனர். பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு காரணமாக மின்துறை, வங்கித்துறை, ரயில்வே, சாலை போக்குவரத்து துறை, கட்டுமானத்துறை ஆகியவற்றின் பங்குகள் கடந்த சில நாட்களாக உயர்வுடனேயே காணப்படுகின்றன.