மத்திய பட்ஜெட்: அன்று முதல் இன்று வரை..  தாக்கல் செய்தவர்களில் தமிழர்கள் யார் யார் தெரியுமா?

Baluchamy
Feb 01, 2023,09:04 AM IST

சென்னை:  மத்திய பட்ஜெட்டுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உள்ளது.


ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்த இந்தியா, 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல் முறையாக சுதந்திர காற்றை சுவாசித்தது. சுதந்திரத்திற்கு பின் இந்தியா, அரசியல் கட்டமைப்பு, சட்ட திட்டங்கள், பொருளாதாரம் என பல விதங்களில் பிற நாடுகளை விட பலமடங்கு முன்னேறி சென்றுகொண்டிருக்கிறது.


பொருளாதாரமே ஒரு நாட்டின் வளர்ச்சி தன்மையை உறுதிப்படுத்தும். அந்தவகையில் நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிட ஆண்டுக்கு ஒரு முறை நாட்டின் நிதியமைச்சர் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வார். நாட்டின் வரவு செலவுகளை திட்டமிடும் வகையில் போடப்படுவதுதான் பட்ஜெட். 


நாடு சுதந்திரம் வாங்கியது முதல் தற்போது வரை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.


1947 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த பின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டை தமிழ்நாட்டை சேர்ந்த சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார். இரண்டாவதாக, தமிழ்நாட்டை சேர்ந்த டிடி கிருஷ்ணமாச்சாரி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இவர் 1957,1958,1964,1965 ஆகிய ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.


மூன்றாவதாக, தமிழ்நாட்டை சேர்ந்த சி. சுப்பிரமணியம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். 1975 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த சுப்பிரமணியம், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் ஆவார்.


நான்காவதாக, ஆர். வெங்கட்ராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 1980 மற்றும் 1981 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த வெங்கட்ராமன், தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.  ஆர்.வெங்கட்ராமன் பின்னர் குடியரசுத் தலைவர் பதவியையும் அலங்கரித்தவர் ஆவார். 


ஐந்தாவதாக, தமிழ்நாட்டை சேர்ந்த ப.சிதம்பரம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 1997 ஆம் ஆண்டு தனது முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.


மேற்கண்ட 5 பேரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆறாம் இடத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டினை தாக்கல் செய்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் பாஜகவைச் சேர்ந்தவர்.


இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வது, அவரது ஐந்தாவது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.