சில்க் ஸ்மிதா.. கண் நிறைய ஏக்கத்தையும்.. மனம் நிறைய துரோகத்தையும் சுமந்த மலர்!

Meenakshi
Sep 23, 2023,05:46 PM IST

- மீனாட்சி


சென்னை: நடிகை சில்க் ஸ்மிதா .. மறைந்த நாள் இன்று.. ஆண்களுக்கு மட்டுமா.. பெண்களுக்கும் நிறைய நிறைய பிடித்தவர் சில்க்ஸ்மிதா.


திராவிடப் பேரழகி என்று வர்ணிக்கப்பட்டவர் சில்க் ஸ்மிதா. அவருடைய அழகு அனைவரையும் கட்டி இழுத்தது என்று சொல்லலாம். அவருடைய கண்ணுக்கும், கொஞ்சு மொழி பேச்சிற்கும், விழி சிந்திய புன்னகைக்கும் மயங்காத ஆண்களே இல்லை என்று செல்லும் அளவிற்கு பேரழகி.




தமிழ் திரை உலகில் சில ஆண்டுகளே நடித்திருந்தாலும்  புகழின் உச்சிக்கே போன  இவருடைய வாழ்க்கை பல ஆச்சரியங்களும், சுவாரஸ்யங்களும், விசித்திரங்களும் நிரம்பியது. இன்றுடன் அவர் மறைந்து 27 வருடங்களாகியும் கூட  இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் என்பதற்கு சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி  படத்தில் இடம் பெற்ற,  சில்க்கின்  உருவம் கொண்ட விஷ்ணுப்பிரியா என்ற பெண்  தோன்றியபோது, கிடைத்த பலத்த கைத்தட்டலே உதாரணம்.


ஆந்திர மாநிலத்தில் விஜயலட்சுமியாகப் பிறந்த சில்க் ஸ்மிதா, நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி சென்றுள்ளார். 1960ம் ஆண்டு டிசம்பர் 2  தேதி ஆந்திராவில் உள்ள ஏலூரு என்ற இடத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். இளமையில் இவருடைய வசீகரத் தோற்றத்தினால் பலருடைய சீண்டல்களுக்கு ஆளானார். அதனால், இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்தனர். குடும்ப வாழ்க்கை இவருக்கு தோல்வியை கொடுத்தது. பிழைக்க வழியின்றி பிழைப்பை தேடி சென்னை வந்தார்.


வண்டிச்சக்கரம் "சிலுக்கு"


சென்னை வந்தவர் தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி தயாரித்த வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில், சிலுக்கு என்ற கதாபாத்திரத்தில் சாராயக்கடையில் பணிபுரியும் பெண்ணாக முதன் முதலில் நடித்தார். அன்று வரை விஜயலட்சுமி எனப்பட்ட இவர், இத்திரைப்படத்திற்கு பின்னர் சில்க் ஸ்மிதா என்ற பெயரில் அழைக்கப்பட்டார். 




1979ம் ஆண்டு இணையை தேடி என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். தன்னுடைய முதல் கதாபாத்திரத்தில் ஏற்பட்ட வெற்றியின் விளைவாக இறுதிவரை கவர்சிகரமான  கதாபாத்திரங்கள் மட்டுமே இவரை தேடிவந்தன. கவர்ச்சியானத் தோற்றத்தாலும், நடனத்தாலும் அனைவரையும் ஈர்த்தார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிப்படங்களில் நடித்தார். 450க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். தென்னிந்திய திரையுலக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். சுமார் 17 ஆண்டுகள் இந்திய சினிமா துறையில் முத்திரைப் பதித்தவர்.


கவர்ச்சிப் புயலாக மாறிய சில்க் ஸ்மிதா


ஆரம்பத்தில் அடக்கம் ஒடுக்கமாக நடித்து வந்த சில்க்கை மூன்றாம் பிறை படம்தான் முற்றிலும் மாற்றிக் காட்டியது. இவரை ஒரு கவர்ச்சி மெட்டீரியலாக பார்க்க ஆரம்பித்தனர் திரையுலகினர். விளைவு.. கவர்ச்சிகரமான பாடல்களுக்கும், நடனங்களுக்கும் சில்க்கை புக் செய்ய ஆரம்பித்தனர்.


மூன்று முகம், சகலகலா வல்லவன்  திரைப்படங்களில் இவருடைய கவர்ச்சி நடனங்கள் புயலைக் கிளப்பின. கவர்ச்சிப் புயலாக மாற ஆரம்பித்தார் சில்க்.. சரி இதுதான் நம்மிடம் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்த சில்க்கும், வஞ்சம் இல்லாமல் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். 




தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் சில்க்கின் கவர்ச்சி அலை வீசத் தொடங்கியது. தென்இந்தியத் திரையுலகில் உள்ள அனைத்து முன்னனி நட்சத்திரங்கள் நடித்த படங்களிலும் இவருடைய பாடல் காட்சி இடம் பெறாமல் இருந்ததில்லை எனலாம். 


அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேட்குதம்மா, மூன்றாம் பிறை, போன்ற திரைப்படங்களின் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தினார் சில்க் ஸ்மிதா. தனக்குக் கவர்ச்சி மட்டுமில்லாமல், அனைத்து விதமான நடிப்பும் வரும் என்பதனையும் நிரூபித்தார். ஆனால் தயாரிப்பாளர்களும், ஹீரோக்களும், இயக்குநர்களும் ஏன் ரசிகர்களுமே கூட சில்க்கின் கவர்ச்சியை மட்டுமே எதிர்பார்த்தனர்.. ரசித்தனர்.


வண்டிச்சக்கரம், அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம் பிறை, சகலகலா வல்லவன், தீர்ப்பு, தனிக்காட்டு ராஜா, ரங்கா, சிவந்த கண்கள், மூன்று முகம், பாயும் புலி, சத்யா, லக்கி மேன், கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற எண்ணிலடங்காத வெற்றிப்படங்களில் நடித்துள்ளார், ஆடியுள்ளார் சில்க் ஸ்மிதா.


ஏமாற்றங்களும் துரோகங்களும்


குறுகிய காலத்துக்குள் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரது வாழ்க்கையில்   சந்தோஷத்தைத் தாண்டி நிரம்பிக் கிடந்தது துரோகங்களும், ஏமாற்றங்களும், மோசடிகளும்தான்.  அத்தனை ஏமாற்றங்களை இவர் சந்தித்துள்ளார். நல்லவேலை பார்த்து நன்றாக சம்பாதித்து சராசரியான பெண்களின் எளிமையான வாழ்க்கையைத்தான் சில்க்கும் எதிர்பார்த்தார். ஆனால் அது கிடைக்கவில்லை.


மாறாக ஆண்களை நம்பி நம்பி ஏமாந்தார். தொடர்ந்து துரோகங்கள் இவரைத் துரத்தின. அடுத்தடுத்து ஏமாற்றமும், துரோகமும் ஒரு பெண்ணைத் துரத்தினால் என்னதான் செய்ய முடியும்.. முடிந்தவரை சமாளித்தார்.. திருப்தியில்லாத வாழ்க்கையை கட்டி இழுத்துக் கொண்டு கடந்தார்.. ஆனாலும் எல்லாம் சேர்ந்து அழுத்தியதில் தாங்க முடியாமல் 1996ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி தனது உயிரை தற்கொலை மூலம் மாய்த்துக் கொண்டார்.


நல்ல மனிதாபிமானம் மிக்க இவர், தான் சம்பாதித்த பணத்தை  ஆந்திர மக்களுக்கு நிதியாக வாரி வழங்கிய சில்க் ஸ்மிதாவின் மற்றொரு முகம் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவரது மறைவுக்கு இவருடன் ஆடிப் பாடி சந்தோஷித்த, இவரை முழுக்க முழுக்க பயன்படுத்தி லாபம் அடைந்த ஒரு ஹீரோ கூட வரவில்லை.. அத்தனை ஆண்களும் இவரது உயிருள்ள உடலைத்தான் விரும்பினார்கள்.. பிணமாகிப் போன அந்த பெண்ணுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்த அவர்கள் தயாரில்லை என்பதை இவரது சோகமான மரணம் நிரூபித்தது.




35 வயதில் முடிந்த சில்க்கின் வாழ்க்கை


சில்க் இறந்தபோது அவருக்கு வயது 35 தான். இவருடைய மரணத்திற்கு பின்னால் பல மர்மங்கள் இருந்து வந்தாலும், அவை யாவும் இன்று வரை வெளிவரவில்லை. சில்க்கின் வாழ்க்கையை தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் மிலன் லூத்ரியா இயக்கத்தில் இந்தி மொழியில் திரைப்படமாக தயாரித்தனர். வித்யா பாலன் சில்க் வேடத்தில் நடித்திருந்தார். 2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தியாவில் பல மொழிகளில் மொழிமாற்றமும் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 


நல்ல மனுஷி, எளிமையான பெண், அதிகம் ஆசைப்படாத ஜீவன், அன்புக்கு  ஏங்கிய மனசு.. அலை பாயாத நல்ல உள்ளம், பிறருக்கு உதவும் தாராள குணம்.. இதுதான் சில்க் ஸ்மிதாவின் உண்மையான  அடையாளம்.. பெண்மையைப் புரிந்து கொள்ளாத ஆண்களால் அழிந்த ஒரு அழகான ஓவியம்தான் சில்க் ஸ்மிதா.