அந்த செங்காய்களை எடுத்து.. உப்பு போட்டு அவிச்சு சாப்பிட்டா.. ஆஹா.. என்னா ருசியா இருக்கும் தெரியுமா?

Su.tha Arivalagan
Mar 31, 2024,06:17 PM IST

- பொன் லட்சுமி


சென்னை: 2கே கிட்ஸ் உண்மையிலேயே நிறைய சந்தோஷங்களை, அனுபவங்களை, சுவாரஸ்யங்களை இழந்து வாழ்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்... அப்படிப்பட்டவற்றில் ஒன்றுதான் இந்த கிராமத்து அனுபவங்கள்.


அட இந்த கிராமங்களில் கூட இன்று நகரத்து வாசனை அதீதமாக வீச ஆரம்பித்து விட்டது.. இதன் விளைவு, கிராமத்துக்காரர்களே கூட பல விஷயங்களை மறக்க ஆரம்பித்து விட்டார்கள்.


கிராமத்து வாழ்க்கையில் நாம் சந்தித்தத மிக சுவாரஸ்யமான அனுபவம்.. "தின்பது"தான்.. அந்தந்த சீசனில் வரும் பழங்களை, காய்களை  தின்று மகிழ்ந்த அனுபவம் நம்மில் பலருக்கும் உண்டு. அதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள் இல்லையா.. அப்படிப்பட்ட நினைவுகளை சற்று கிளறிப் பார்க்கலாம் இதில்.


ஈச்சபழம் 




இதை ஈந்தம்பழம்னு கூட சொல்வாங்க.. நான்  சிறுவயதாக இருக்கும் போது  எங்கள் ஊரில் அதிகமாக ஈச்சமரம் இருந்துச்சு. இன்னைக்கும்   ஒரு சில கிராமங்களில்  இந்த ஈச்சப்பழம் கிடைக்கிறது.. இந்த மரம்  பெரும்பாலும் ஆற்றங்கரையிலும்  தோட்டங்களின்  வேலி ஓரத்திலும் காடுகளிலும் தான் அதிகமாக காணப்படும்.. இந்தச் செடியில்  அதிகமாக முள் இருக்கும், பார்ப்பதற்கு பேரிச்சை மரத்தை போல அளவில் சிறியதாக இருக்கும்.. கோடை விடுமுறை காலமான மார்ச் முதல் ஜூன் வரை இந்த ஈச்சம் பழ சீசன் ஆரம்பித்து விடும்... அதிலும் ஞாயிற்றுக்கிழமை என்றாலே இந்த பழத்தை பறிப்பதற்காக   நண்பர்களுடன் சேர்ந்து காடு காடாக அலைவோம் முட்கள் குத்தினாலும் கவலைப்பட மாட்டோம் . அதை எப்படியாவது பறித்தே ஆக வேண்டும் அதுதான் எங்கள் ஒரே இலக்கு.


அந்தப் பழத்தை போட்டி போட்டு பறிக்கும் போது  கையிலும் காலிலும்  முள் குத்திய தடம் தான் அதிகமாக இருக்கும் அதையும் பொருட்படுத்தாமல் பழங்களை பறித்து முடித்தவுடன்  போட்டியில் வெற்றி பெற்று பரிசு வாங்கிய ஃபீல் தான் வரும்.. வீட்டிற்கு முள் குத்திய  தழும்போடு கை கால்களில் ரத்தம் கசிய, கையில்  ஈச்சம் குலையோடு வந்தால் அம்மா திட்டும்.. ஆற்றிற்கு குளிக்க சென்றாலே வரும் போது கையில் இரண்டு மூன்று ஈச்சம்  குலைகளோடு தான் வருவோம். அந்த வசந்த நாட்களை நினைக்கும் போது இன்றும்  மனதில் பசுமையான நினைவுகள் வந்து போகிறது.. இதில்   காய்கள் கொத்து கொத்தாக இருக்கும்.. பச்சை நிறத்தில் துவர்ப்பாக இருக்கும்.. 


அந்த செங்காய்களை சிறு வயதில் சுவைத்து முகம் சுழித்ததுண்டு.. ஆனாலும்  நாங்கள் அதில் உப்பு போட்டு அவித்து சாப்பிடுவோம் அவ்வளவு ருசியாக இருக்கும்.. கொஞ்சம் முதிர்ந்த காய்கள் சிகப்பு நிறத்தில் இருக்கும் அதுவும் கொஞ்சம் துவர்ப்பாக தான் இருக்கும்.. அந்த காய்களை  அரிசிக்குள் முக்கி வைத்தால் பழுத்து விடும்.. பழுத்த காய் கருப்பு நிறத்தில் இருக்கும் அவ்வளவு ருசியாக இருக்கும்.. பள்ளிக்கூட வாசலில் கூடையில் வைத்து படியில் அளந்து  ஒன்று இரண்டு ரூபாய்க்கு  விற்கும் வயதான பாட்டியிடம் கருப்பு நிற ஈச்சப்பழங்களை வாங்கித் தின்றது  இன்றும் நினைவில் இருக்கிறது.  அதை நினைக்கும் போது இன்றும் நாக்கில் எச்சில் ஊறுகிறது. சிறுவயதில் இதன் பலன் என்னவென்று தெரியாமல்  அதிகமாக சாப்பிட்டோம்.. ஆனால்  இன்று சாப்பிட நினைத்தால் கூட முடியவில்லை.. இப்பொழுது இந்த மரங்களையோ  பழங்களையோ எங்கள் கிராமத்தில் பார்ப்பது கூட மிகவும் அரிதாகி விட்டது.


கொடுக்காப்புளி :-




ஆஹா.. இந்தப் பழத்துக்கு ஈடு இணையே கிடையாதுங்க. இதுக்கு ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு விதமான பெயர் உண்டு.. கோணக்கா, கொடி காய் ,கொடுக்காப்புளி, சீனி புளியங்கா இன்னும் நிறைய பெயர் உண்டு.. எங்க கிராமத்துல இதுக்கு பேரு கொடுக்காப்புளி.  சின்ன வயசா இருக்கும்போது எங்க வீட்டில கொடுக்காப்புளி மரம் இருந்தது..  சீசன்ல எப்பவுமே நிறைய காய் காய்க்கும்.. இந்த மரத்துல முள்ளு அதிகமா இருக்கிறதுனால மரத்துல ஏறி பறிக்க முடியாது.. பெரிய கம்புல கொக்கி மாதிரி கட்டி கீழ இருந்து பழத்தை  பறிப்போம்.  நாங்க மட்டும் இல்லாம பக்கத்து வீட்ல உள்ள  நண்பர்களும் வந்து பறிச்சி சாப்பிடுவாங்க.. இந்த பழத்தை சாப்பிட நிறைய குருவி கிளி எல்லாம்  எங்க வீட்டுக்கு வரும்... 


காலையில தூங்கி முழிச்சதும் அந்த குருவிகளோட சத்தம் கேட்கும் போது ரொம்ப அழகா இருக்கும்... ரொம்ப பழுத்த பழத்தை எல்லாம் பாதி  மரத்திலிருந்து கிளி எல்லாம் சாப்பிட்டுட்டு  மீதி பழம் மரத்திலேயே தொங்கிட்டு இருக்கும்.. இல்லன்னா கீழ விழுந்து கிடக்கும்... கிளி கொத்துன பழம் டேஸ்ட்டா இருக்கும்னு சொல்லி அந்த பழத்துக்காக நாங்க சண்டை போடுவோம்... அந்தப் காயை சாப்பிட்டா கொஞ்சம் துவர்ப்பு தன்மையா இருக்கும்.. ஆனா நல்ல பழமா ஆனப்புறம் சாப்பிட்டா ரொம்ப டேஸ்டா இருக்கும்... இனிப்பும் துவர்ப்பும் சேர்ந்த ருசியில் இருந்த இந்த பழத்திற்கு நாங்கள்ளாம் அடிமை.. அதுக்கு உள்ளே இருக்கிற கருப்பு கலர் விதையை எடுத்து  அத ரெண்டா உடைச்சி கண்ணுக்கு மேல ஒட்டி வச்சு பேய் மாதிரி எல்லாத்தையும் பயம் காட்டுவோம்.. 


அந்த நாட்களை இப்ப நினைச்சா கூட அவ்வளவு  சந்தோசமா   இருக்குது.. அப்போது இந்த பழத்தின் மருத்துவ குணம் பற்றி எதுவுமே தெரியாது.. ஆனால் இப்போது இந்த மரங்களை பார்ப்பதே மிகவும் அரிதாகி விட்டது.. தேடினாலும் கிடைப்பதில்லை .. இப்போது ஒரு கிலோ  ரூ.500 க்கு மேல் என்கிறார்கள்.. அந்தக் கிரகத்தை நினைத்தால்தான் கவலையாக இருக்கு. ஒரு நேரத்தில்  சும்மா நம்ம ஊர்களில் கிடைத்த ஒரு பழம் இன்று அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிட வேண்டிய நிலையாக உள்ளது மன வேதனை அளிக்கிறது. முடிந்த வரை இந்த மாதிரியான பயனுள்ள மரங்களை வெட்டுவதை தவிர்த்து வரும் கால சந்ததிகளும் இதன் பயன்களை அனுபவிக்க வழிவகை செய்யுங்கள்.


கலாக்காய் : (பிளாக்காய் )




கலாக்காய் அல்லது பிளாக்காய் ... இந்த கலாக்காயில் அதிகமான  மருத்துவ குணங்கள்  அடங்கி இருக்கிறது.  இதன் பயனை அறிந்து  இன்று பல இடங்களில் அதிகமாக சாகுபடி  செய்கிறார்கள்.. இன்று சாகுபடி செய்யப்படும் கலா காய்கள் சிகப்பு நிற வண்ணத்தில் இருக்கிறது.. எங்கள் கிராமத்தில் நான் சிறுவயதாக இருக்கும்போது இதை பிளாக்கா என்போம்.. பெரும்பாலும் இது காடுகளில் ஆற்றங்கரை ஓரத்தில் தான் அதிகமாக இருக்கும்.. அப்பல்லாம்  கேஸ் அடுப்பு எதுவும் கிடையாது .. அதனால கிராமத்துல இருக்குறவங்க எல்லாம் மலைக்கு போய் விறகு வெட்டிட்டு வருவாங்க அப்போ எங்க அம்மா கூட நானும் போவேன்.. அப்போ இந்த மரத்தில் நிறைய காய் காய்க்கும்..  நான் பறிச்சா மரத்தில் இருக்க முள் குத்தும் அப்படின்னு எங்க அம்மா எனக்கு பக்குவமா பறிச்சு தருவாங்க.. இந்த பழத்தை பறிக்கும் போது கையில பால் ஒட்டும்..


நானும் எங்க அம்மாவும் சாப்பிட்டுட்டு மீதி இருக்கிறத வீட்டுக்கு கொண்டு வருவோம்...  இது பெரிய மரமாகவும் இல்லாம சிறிய செடியாகவும் இல்லாம  ஓரளவு புதர் செடியாகத்தான் வளரும்.. ஆகஸ்ட் மாசத்துல இருந்து அக்டோபர் மாசம் வரைக்கும்  சீசன் இருக்கும்.. இதுல  காய்கள் பச்சை நிறத்தில் இருக்கும்.. அதை சாப்பிடும் போது புளிப்பும் கொஞ்சம் துவர்ப்பும் சேர்ந்த கலவையில் இருக்கும்.. அது கூட கொஞ்சம்  உப்பு சேர்த்து  சாப்பிடும் போது அவ்வளவு ருசி அள்ளும்.. கொஞ்சம் முதிர்ச்சியான காய் இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும் அதுவும் கொஞ்சம் துவர்ப்பு தன்மையுடன் தான் இருக்கும்.. ஆனால் பழுத்த பழம் கருப்பு நிறத்தில் கிட்டத்தட்ட நாவல் பழம் போன்று இருக்கும் அதன் சுவை இனிப்பாக இருக்கும்.. இந்த பழத்தை பறிக்கும் போது கையில் பால் ஒட்டும்.. அப்பலாம் இதுல இருக்கிற மருத்துவ குணம் என்னன்னு தெரியாமையே நிறைய பழம்   சாப்பிட்டு  இருக்கோம்.. இப்போ வெளியூருக்கு செல்லும்போது எங்கேயாவது ஒரு இடத்துல ரோட்டுல   வச்சி வித்துட்டு இருப்பாங்க.. அதை பார்க்கும் போது  பழைய ஞாபகம் எல்லாம் வந்து அசைபோடும்.. நீங்களும் வெளியே செல்லும்போது எங்கேயாவது பாத்தீங்கன்னா  கண்டிப்பா இந்த பழத்தை வாங்கி சாப்பிடுங்க ஏன்னா  இந்த பழத்துல அவ்ளோ மருத்துவ குணம் இருக்குது...!


ம்ம்.. இந்த 2 கே கிட்ஸ் கொஞ்சம் பாவம்தான்.. இந்த அனுபவம் எல்லாம் அவங்களுக்குக் கிடைக்காமல் போகுதேன்னு நினைக்கும்போது கஷ்டமாதான் இருக்கு.