வீல் சேர் இல்லாததால்.. ஏர்போர்ட்டில்.. முதியவர் உயிரிழந்த விவகாரம்.. ஏர் இந்தியாவுக்கு அபராதம்!
மும்பை: மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக நடந்து சென்ற 80 வயது முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 12ம் தேதி நியூயார்க்கில் இருந்து தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ளார் 80 வயதுடைய முதியவர். நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக மும்பைக்கு வந்துள்ளார். நியூயார்க்கில் இருந்து தனது மனைவியுடன் மும்பைக்கு வரும் முன்பே இரண்டு இரு சக்கர நாற்காலிகளை முன் பதிவு செய்துள்ளார். மும்பை வந்து சேர்ந்த பிறகு 2 சக்கர நாற்காலி கிடைக்கவில்லை. வீல்சேருக்குப் பற்றாக்குறை இருப்பதாக கூறி ஒன்றை மட்டுமே ஏர் இந்தியா நிறுவனம் அளித்துள்ளது.
இதையடுத்து அதில், தனது மனைவியை அமர வைத்துக்கொண்டு அவரைப் பின் தொடர்ந்து சென்றார் அந்த முதியவர். கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரம் அவர் நடந்து வந்துள்ளார். அபொழுது, அவர் திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மும்பை விமான நிலையத்தில் 80 வயது பயணி நடக்க விடப்பட்டு மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.