நீட்- யூஜி கலந்தாய்வு.. தேதி குறிப்பிடாமல் காலவரையின்றி ஒத்திவைப்பு!

Meenakshi
Jul 06, 2024,05:34 PM IST

டெல்லி: இன்று நடைபெறுவதாக இருந்த இளங்கலை நீட் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக எம்பிபிஎஸ் படிக்கு மாணவர்களுக்கு நீட் என்ற தேசிய தகுதி தேர்வு நடந்து வருகிறது. இந்த நீட்  சம்பந்தமாக ஏகப்பட்ட பிரச்சனைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு சர்ச்சைகள் நடந்து வருகின்றன.




ஜூலை 6ம் தேதி ஆதாவது இன்று இந்தியா முழுவதும் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்த நிலையில், இந்த கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு  தெரிவித்ததால், கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தொடர்பான அனைத்து மனுக்களும் ஜூலை 8 நாளை மறுநாள் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு பின்னர் நீட் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோருடன் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான உச்சநீதி மன்றத்தில் விசாரிக்க உள்ளது.


இதன் காரணமாக இன்று நடைபெற இருந்த நீட் இளங்கலை நுழைவுத் தேர்விற்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு தேதி வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கலந்தாய்வு குறித்த தகவல்கள் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்து விட்டு மீண்டும் புதிய தேர்வு நடத்த வேண்டும் என்றும் சிலர் வழக்கு பதிவு செய்துள்ளதால், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு  என்னவாக இருக்கும் என்று பெறும் எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது.