அண்ணாமலை நடைபயணத்துக்கு உதயநிதி "செக்" .. தமிழ்நாடு முழுவதும் அதிரடி டூருக்கு திட்டம்!

Su.tha Arivalagan
Jan 26, 2023,11:06 AM IST
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மாநிலம் முழுவதும் நடை பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு செக் வைக்கும் வகையில் திமுக இளைஞர் அணிச்செயலாளரும்,அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.



இளம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கி  தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அவர் வந்து சேர்ந்துள்ளார். காஷ்மீரில் தனது பயணத்தை அவர் முடிக்கவுள்ளார்.

இதையடுத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். திருச்செந்தூரில் தனது நடைபயணத்தைத் தொடங்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இந்தப் பயணத்தை பாஜகவினர் வெகுவாக எதிர்பார்த்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் அண்ணாமலையின் நடைபயணத்துக்கு செக் வைக்கும் வகையில் திமுக உதயநிதிஸ்டாலினை களம் இறக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளிலும் உதயநிதிஸ்டாலின் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயநிதியின் இந்த பயணமானது, 234 சட்டசபைத் தொகுதிகளிலும் திமுகவினரை தட்டி எழுப்பும், சுறுசுறுப்பாக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. பாஜகவினருக்கு எதிராக இன்னும் தீவிரமாக செயல்படக் கூடிய வலுவை அது அவர்களுக்குத் தரும் என்றும் திமுக தலைமை கருதுகிறது.

இந்த பயணத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட அளவிலான மாநில விளையாட்டு அணிகளையும் சந்திக்க உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். இதுதவிர மாவட்ட அளவில் கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, டென்னிஸ், கபடி, சிலம்பாட்டம், கராத்தே, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல் உள்ளிட்ட போட்டிகளை  நடத்துவது தொடர்பாகவும் திட்டமிட்டு வருகிறாராம்உதயநிதி ஸ்டாலின்.

அண்ணாமலை, தமிழ்நாட்டில் உள்ள லோக்சபா தொகுதிகளைக் குறி வைத்து நடை பயணம் தொடங்கவுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் 234 சட்டசபைத் தொகுதிகளை மனதில் வைத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.