செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், ராஜேந்திரன், கோவி. செழியன் புதிய அமைச்சர்களாக பதவியேற்றார்கள்!

Su.tha Arivalagan
Sep 29, 2024,04:39 PM IST

சென்னை:  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.


மாலை 3.30 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன்ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்கியதும் முதலில் புதிய அமைச்சர்கள் மநால்வருக்கும் ஆளுநர் ஆர். என். ரவி. பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார். முதலில் சேலம் இரா. ராஜேந்திரன் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி, கோவி. செழியன் மற்றும் சா.மு. நாசர் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.




விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை அமைச்சராகியுள்ளார். நிகழ்ச்சியில் தனது மனைவி, மகள், தாயார் ஆகியோருடன் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.


முன்னதாக பதவியேற்பு விழாவில்  கலந்து கொள்ள வருமாறு 116 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் வரவில்லை. திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் செல்வப் பெருந்தகை, வைகோ, முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்கவுள்ளனர். புதிய அமைச்சர்களுடன் அவர்களது குடும்பத்திலிருந்து தலா 10 பேர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். புதிய அமைச்சர்கள் பதவியேற்புக்குப் பின்னர் அனைத்து அமைச்சர்களும் சேர்ந்து ஆளுநர் மற்றும் முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்..


ஆளுநர் மாளிகை பாங்கட் ஹாலில் வைத்து குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. இதில் ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், புதிய அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இத்துடன் பதவியேற்பு விழா நிறைவுக்கு வந்தது.


யார் யாருக்கு எந்த துறை?


புதிய அமைச்சர்கள் நான்கு பேருக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரா. ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை தரப்பட்டுள்ளது., செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முனைவர் கோவி செழியனுக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் சா.மு. நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஒதுக்கீடு செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.


இவர்கள் தவிர மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டு ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்