ஒரே ஒரு கொசுவர்த்தி.. டோட்டல் நெட்டிசன்களின் தூக்கத்தையும் கெடுத்த உதயநிதி!

Meenakshi
Sep 11, 2023,03:25 PM IST
சென்னை: "பாம்" பக்கிரி என்ற கேரக்டரில் வடிவேலு ஒரு படம் நடித்திருப்பார். அதில் "ஒரே ஒரு பாம்தான்.. டோட்டல் சிட்டியே குளோஸ்" என்று வசனம் பேசுவார்.. கிட்டத்தட்ட அப்படித்தான்.. உதயநிதி ஸ்டாலின் ஒரே ஒரு டிவீட் போட்டார்.. மொத்த நெட்டிசன்களும் வந்து குவிந்து விட்டனர் அங்கு.

அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். 



இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பாஜக மற்றும் இந்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு பக்கம்  பலர் அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

சனாதன சர்ச்சை சமூக வளைதளங்களில் ஒரு ரவுண்ட் வந்த நிலையில் அமைச்சர் உதயநிதியின் சமூக வலைத்தளப்பதிவு அடுத்தடுத்து வைரலாகி வருகிறது. சமீபத்தில் போட்ட ஒரு டிவீட்டில் ஒரே ஒரு கொசுவர்த்தியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஏன், எதுக்கு என்று எதையும் குறிப்பிடாமல் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளதால், இணையவாசிகள் பல்வேறு வகைகளில் அதை விவாதித்து வருகின்றனர்.

அன்பில் மகேஷ் பாராட்டு

உதயநிதி போட்டுள்ள இந்த டிவீட்டைப் பார்த்த அவரது நண்பரும், அமைச்சருமான அன்பில் மகேஷ், நீ விளையாடு நண்பா என்று முடுக்கி விட்டுப் போயுள்ளார். இதையடுத்து கருத்துக்கள் வேகமாக குவிய ஆரம்பித்துள்ளன.

சமீபத்தில் சனாதனம் குறித்து டெங்கு, மலேரியா போன்று சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டி, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற ரீதியில் தான் அவர் கொசுவர்த்தி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் என்றும், சனாதன சர்ச்சைகள் குறித்து அவருக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்களுக்கு சினிமாவில் வரும் காமெடி காட்சிகளைப் போல ‘நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியலப்பா..’ என்ற ரீதியில் பதிலளிக்கத்தான் இப்படி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் என்றும் தெரிவித்து வருகின்றனர். 



இன்னும் சிலரோ, தமிழ்நாட்டில் டெங்கு பரவலால் நேற்று 4 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மக்கள் 
அனைவரும் டெங்குவில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதனை உணர்த்தும் பொருட்டு தான் உதயநிதி கொசுவர்த்தி புகைப்படத்தைப் பகிர்ந்து அறிவுரை கூறியுள்ளார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பலர் பல்வேறு கதை சொன்னாலும், புகைப்படத்திற்கான உண்மைக் கதை, அமைச்சர் உதயநிதிக்கு மட்டுமே தெரியும்!