இன்னும் 2000 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் உங்களால் கால் பதிக்க முடியாது.. உதயநிதி ஸ்டாலின்

Su.tha Arivalagan
Jan 21, 2024,06:16 PM IST

சேலம்: கடந்த 2000 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சித்து வருகிறார்கள். இன்னும் 2000 ஆண்டுகள் ஆனாலும் அது முடியாது. காரணம், தமிழ்நாட்டை இன்று வழி நடத்திக் கொண்டிருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று அமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.


சேலம் திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் இன்று தலைமை உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:


இன்று ஒருவர், 22 கிணற்றில் நீராடி விட்டு ராமநாத சுவாமியைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறார். ஆனால் இங்கே நாம் 22 தலைப்புகளில் பேசியுள்ளோம். கிழவன் ராமசாமியை நோக்கி நமது பேச்சுக்கள் அமைந்துள்ளன. இங்கு பேசிய அனவருக்கும் நன்றி. 


எனக்கு மறக்க முடியாத நாள் இது. திருமண நாள், அமைச்சராக பொறுப்பேற்ற நாளை மறக்க மாட்டோம் இல்லையா, இது  அதை விட மிகப் பெரிய நாள். இந்த ஜனவரி 21ம் தேதியை வாழ்நாளில் மறக்க முடியாத நாள்.  கலைஞரும், பேராசிரிரும் தலைவரிடம் கட்சியைக் கொடுத்தனர். அவர் இளைஞர் அணியை நம்மிடம் ஒப்படைத்தார். இது தலைவர் வகித்த பொறுப்பு. அந்தப் பொறுப்பில் கடந்த நான்கரை வருடமாக பயணித்துக் கொண்டிருக்கிறேன்.




10 ஆண்டு கால பாசிச ஆட்சியை முடிவு கட்ட இங்கு அதற்கான செயல்பாடுகளை தொடங்கியிருக்கிறோம். இது பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டும் படை. நம் மீது பண்பாட்டுத் தாக்குதலை நடத்துகின்றனர். அனைத்து உரிமைகளையும் பறித்து விட்டனர். நீட் உயிர்கொல்லி நோயாகக மாறியுள்ளது. இதுவரை 11 பேர் தற்கொலை செய்துள்ளனர்.  இப்போது மருத்துவம் மட்டுமல்ல எல்லா பட்டப் படிப்புக்கும் என்ட்ரன்ஸ் என்று சொல்கிறார்கள்.


மொழி நம்முடைய உயிர். தமிழை அழிக்க நினைத்தால் அதைத் தடுக்க உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். மத்திய அரசுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 2000 வருடமாக இந்த முயற்சியை செய்து கொண்டுள்ளீர்கள். இதுவரை தமிழ்நாட்டில் கால் வைக்க முயற்சி செய்துட்டுதான் இருக்கீங்க. இன்னும் 2000 வருடம் ஆனாலும் அது உங்களால் முடியாது. உங்களது எண்ணத்தை ஒருபோதும் திமுக  அனுமதிக்காது. காரணம், இந்த இயக்கத்தை நடத்துவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். 


எங்களைப் பயமுறுத்த நினைக்கறீங்க. இடி, சிபிஐ என்று பயமுறுத்தப் பார்க்கறீங்க. நாங்கள் இடிக்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். நாங்க என்ன, திமுக தொண்டன் வீட்டுக் கைக்குழந்தை கூட பயப்படாது. களத்தில் இறங்கி தொண்டனோடு தொண்டராக இருப்பவர் நமது தலைவர். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் மொத்த உருவமாக இருப்பவர் நமது தலைவர். 


ஒரு குட்டிக் கதை சொல்கிறேன். ஒரு ஊரில் சின்னப் பையன் இருந்தான். அவனுக்கு ரேஸ் என்றால் விருப்பம். ஊரில் ஓட்டப் பந்தயம் நடந்தது. வயதான முதியவர் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிறுவன், வேகமாக ஓடி ஜெயிச்சுட்டான். ஊர் கை தட்டியது. பெரியவர் கை தட்டவில்லை. மீண்டும் போட்டி நடந்தது. அதிகமான வயதுள்ளவர்களுடன் கலந்து கொண்டு சிறுவன் மீண்டும் ஓடினான், மறுபடியும் ஜெயிச்சான். இப்போதும் பெரியவர் கைதட்டவில்லை.  


உடனே அந்தப் பெரியவரிடம் போய், சிறுவன் கேட்டான், நான்தான் ஜெயிசசுட்டேனே எல்லோரும் கைதட்டினார்கள். நீங்க தட்டலையே என்றான். அதற்கு பெரியவர், நம்ம கிராமத்தில் 2 பேர் இருக்காங்க. அவர்களுடன் ஓடி உன்னால் ஜெயிக்க முடியுமா என்று கேட்டார். அதில் ஒருவர் கண் தெரியாத மாற்றுத் திறனாளி, இன்னொரு சிறுவன் உடம்பில் சத்தே இல்லாக சிறுவன். மறுபடியும் ரேஸ் நடந்தது. இப்போதும் சிறுவனே ஜெயித்தான். ஆனால் இந்த முறை கூட்டம் கைதட்டவில்லை. 


இதையடுத்து முதியவரிடம் போன சிறுவன், கடந்த முறை நான் ஜெயித்தபோது கைதட்டினார்கள். இப்போது கை தட்டவில்லையே என்று கேட்டான். அதற்குப் பெரியவர், இப்போது சிறுவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஓடு என்றார். மீண்டும் ஓடினார்கள். இப்போது அந்த சிறுவனுடன் சேர்த்து 3 பேரும் ஜெயித்தார்கள். இப்போது மொத்த ஊரும் கை தட்டி உற்சாகத்துடன் வரவேற்றது.


இதேபோலத்தான் நாங்களும் அனைவருடனும் கைகோர்த்து ஓடிக் கொண்டிருக்கிறோம். சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருடன், காலம் காலமாக அடிமைப்படுத்தப்பட்ட பெண்களோடு இணைந்து கை கோர்த்து ஓடிக் கொண்டிருக்கிறோம். எல்லோரும் சேர்ந்து வெற்றிக் கோ்டடை தொட வேண்டும் என்று நினைக்கிறோம். இதனால்தான் திமுக வெற்றியை மொத்த மக்களும் கொண்டாடுகிறாோம். 


திமுக இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணியும் இதேபோன்ற வெற்றியைப் பெறப் போகிறது. பாசிஸ்டுகளின் காலம் முடிவுக்கு வரப் போகிறது. முதல்வர் வழிகாட்டுதலின்படி தேர்தல் பணியைாற்றுவோம். தலைவர் அவர்களே, இது உங்களது குழந்தை, நிறைய பொறுப்பு கொடுங்க, வேலை கொடுங்க. அதேபோல நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுங்க என்றார் உதயநிதி ஸ்டாலின்..