உதயநிதி ஸ்டாலினின் புலிப் பாய்ச்சல்.. ஐந்தே வருடத்தில் துணை முதல்வர்.. இது திமுகவின் டி20 காலம் பாஸ்

Su.tha Arivalagan
Sep 29, 2024,04:39 PM IST

சென்னை: ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போல இருந்தது திமுகவின் அரசியல்.. அதனால்தான் முதல்வர் உள்ளிட்ட பதவிகளுக்கு மு.க.ஸ்டாலின் உயருவதற்கு நீண்ட நெடிய காலம் பிடித்தது. ஆனால் இப்போது டி20 காலம்.. அதனால்தான் அரசியலுக்கு வந்து ஐந்தே வருடத்தில் துணை முதல்வர் பதவிக்கு உயர்ந்து திமுக இளைஞர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.


நாங்களும் ஆடுவோம் சார்.. ஆனா எங்க ஆட்டம் சும்மா வெறித்தனமா இருக்கும் என்று ஒரு படத்தில் விஜய் சொல்வார்.. அதுபோலத்தான் இப்போது உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான இளைஞர் படை திமுகவில் வேற லெவல் ஆட்டத்தை நடத்தி வருகிறது. அதற்கு தற்போது கூடுதலாக காலில் கொஞ்சம் சலங்கையை கட்டி விட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. இனி 2026 தேர்தலில் இளைஞர் அணியின் பாய்ச்சல் வேற மாதிரி இருக்கும் என்று இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டது திமுக இளைஞர் படை.


2019ல் தொடங்கிய உதயம்




2019ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்துதான் உதயநிதி ஸ்டாலின் அத்தியாயம் திமுகவில் தொடங்கியது. அவர் தேர்தலில் போட்டியிடக் கோரி அந்த மாதத்தில்தான் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபா தேர்தலில் அவரைப் போட்டியிட வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முதலில் எழுந்தது. பின்னர் சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையாக அது மாறியது.


இந்த கோரிக்கைகளுக்கு மத்தியில் 2019 ஜூலை மாதம் திமுக இளைஞர் அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டார் உதயநிதி ஸ்டாலின். பொறுப்பு கைக்கு கிடைத்ததும்  பாயும் புலியாக மாறினார் உதயநிதி. மாநிலம் முழுவதும் கட்சியின் செயல்பாடுகள் குறிப்பாக இளைஞர் அணியின் செயல்பாடு புது வேகம் பெற்றது. படு வேகமாக உதயநிதி கட்சியில் இரண்டறக் கலந்து அனைவராலும் விரும்பப்படும் தலைவராக உருவெடுத்தார்.


ஒற்றைச் செங்கல் பிரச்சாரம்




இந்த நிலையில்தான் 2021ல் வந்தது  சட்டசபைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மொத்தப் பிரச்சாரக் களத்தையும் அதிரடியாக மாற்றிப் போட்டது உதயநிதியின் பிரச்சார பாணி. ஒற்றை செங்கல்லைக் காட்டி அவர் செய்த பிரச்சாரம் பட்டி தொட்டியெங்கும் பாப்புலர் ஆனது. திமுக கூட்டணிக்கு அது மிகப் பெரிய பலமாக மாறியது. அவர் பிரச்சார வேனுக்குள் குணிந்து எடுக்கட்டுமா என்று கேட்டதுமே கூட்டத்தினர் ஆரவாரித்து அதிர வைத்தனர். காரணம், அவர் எடுக்கவா என்று சொன்னது அந்த செங்கல்லைத்தான். அந்த அளவுக்கு அந்த செங்கல் பிரச்சாரம் மிகப் பிரபலமானது. அகில இந்திய அளவில் அது பாஜக கூட்டணியை உலுக்கிப் போட்டது என்பதே உண்மை.


முதல் முறையாக திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டசபை உறுப்பினர் ஆகி திமுக வரலாற்றில் புதிய வரலாறு படைத்தார் உதயநிதி ஸ்டாலின். அதன் பின்னர் அடுத்தடுத்து அவரது உயர்வுகள் வேகம் பிடித்தன. அடுத்த ஓராண்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் உதயநிதி ஸ்டாலின்.  தற்போது கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து துணை முதல்வராகிறார்.


உதயநிதியின் மின்னல் வேக வளர்ச்சி




மறைந்த தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்தபோது மு.க.ஸ்டாலினை படிப்படியாகத்தான் உயர்த்திக் கொண்டு வந்தார். அப்போது ஆக்டிவான பல தலைவர்கள் இருந்ததால் அவர்களை ஸ்கிப் செய்ய முடியாத நிலை கருணாநிதிக்கு. அது ஒரு வகையில் ஸ்டாலினுக்கும் சாதகமாகவே அமைந்தது.. அதாவது நல்ல ஒரு தலைவராக பக்குவப்பட அந்த தாமதம் உதவியது. ஆனால் அந்தத் தாமதம் ஒரு கட்டத்தில் மிகவும் தாமதம் என்றாகி விட்டது. கருணாநிதி உடல் ரீதியாக சற்று பின்னடைவைச் சந்தித்தபோதுதான் திமுகவின் செயல் தலைவராக, துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர்தான் அவர் திமுக தலைவராக முடிந்தது, முதல்வராக முடிந்தது. இப்படி எல்லாமே தாமதமாகவே நடந்தது ஸ்டாலினுக்கு.


ஆனால் உதயநிதிக்கு அப்படி நடக்கவில்லை. எல்லாமே மின்னல் வேகம் என்று சொல்வார்களே அந்த அளவுக்கு இருக்கிறது. ஒவ்வொரு பதவியும், ஒவ்வொரு உயர்வும் அதி வேகத்தில் நடக்கிறது. காரணம், உதயநிதியைத் தாண்டி எந்த ஒரு தலைவரையும் இப்போது திமுகவில் ஆக்டிவாக பார்க்க முடியவில்லை. உதயநிதியிடம் கட்சிப் பொறுப்புகள், ஆட்சிப் பொறுப்புகளை ஒப்படைத்தால்தான் ஆட்சியை தொடர்ந்து நிலையாக நடத்த முடியும், கட்சியும் கட்டுக்கோப்பாக இருக்கும் என்ற நிலை. இதுதான் சரியான முடிவாகவும் இருக்க முடியும். கட்சியினராலும் விரும்பப்படும் தலைவராக இயற்கையாகவே உதயநிதி உயர்ந்து நிற்கிறார். எனவே அவருக்கு கால தாமதம் இல்லாமல் ஒவ்வொரு உயர்வையும் கொடுப்பது திமுகவினரைப் பொறுத்தவரை நியாயமானதாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது அவருக்குக் கிடைத்துள்ள இந்த துணை முதல்வர் பதவியை திமுகவினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.


முதல்வர் வேட்பாளராகும் வாய்ப்பும் பிரகாசம்




2026 சட்டசபைத் தேர்தலில்  உதயநிதி ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக திமுக அறிவித்து களம் கண்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், அதுதான் திமுகவினரின் மன ஓட்டமாகவும், விருப்பமாகவும் கூட இருக்கிறது. அப்படி செய்தால் அடுத்த ஆட்சியும் நமக்கே என்பது திமுகவினரின் அசைக்க முடியாத எண்ணமாகும். அதை விட முக்கியமாக, கருணாநிதி, ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளை விட பல மடங்கு அதிக சாதனைகளை உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்தி புதிய வரலாறு படைப்பார் என்பதும் திமுகவினரின் அசைக்க முடியாத கருத்தாக உள்ளது. அதிமுக, பாஜக, விஜய், நாம் தமிழர் என கண் முன்  நிற்கும் அத்தனை சவால்களையும் முறித்துப் போட்டு திமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கவும், திமுகவை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு வலுவான இயக்கமாக எடுத்துச் செல்லவும் உதயநிதி ஸ்டாலின் வசம் அதிகாரம் இருக்க வேண்டும் என்ற கட்சியினரின் ஒருமித்த கருத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதித்து இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.


அனுபவம் கூடக் கூட இன்னும் சிறந்த தலைவராகவும் கூட உதயநிதி ஸ்டாலின் உருவெடுக்கக் கூடும்.. இதுவரை இருந் தலைவர்கள் செய்த சாதனைகளை மிஞ்சும் தலைவராகவும் அவர் உருவெடுக்க வாய்ப்புகள் அதிகம் என்பதை மறுக்க முடியாது. உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்