"முடியைப் பிடிச்சு இழுத்து".. ஒரு சேலைக்கு இந்த அக்கப்போரா.. இப்படி பண்றீங்களேம்மா!

Su.tha Arivalagan
Apr 25, 2023,11:41 AM IST
பெங்களூரு: பெங்களூரில், குறைந்த விலையில் சேலை விற்ற ஜவுளிக் கடையில், இரண்டு பெண்களுக்கு இடையே கடும் மோதல் மூண்டது. ஆளுக்கு  ஒரு தலையைப் பிடித்துக் கொண்டு முடியைப் பிடித்து ஆய்ந்து விட்டனர் இரண்டு பெண்களும். காவலர்கள் வந்து இருவரையும் பிரித்து விடுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

இலவசம் அல்லது குறைந்த விலை என்று எந்த அறிவிப்பு வந்தாலும் நம்மாட்கள் குவிந்து விடுவார்கள். உயிரைப் பணயம் வைத்து அந்தப் பொருளை வாங்காமல் வீடு திரும்ப மாட்டார்கள். அப்படி ஒரு கெட்ட பழக்கம் நம்ம ஊரில் இருக்கிறது. நம்ம ஊர் என்றால் இந்தியாவில் எல்லா இடங்களிலுமே இது சகஜம்தான். இதுபோன்ற இடங்களில் கண்டிப்பாக ஒரு சண்டை நடந்தே தீரும். அப்படி ஒரு டிசைன் இதற்கு.



இந்த நிலையில் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள மைசூர் சில்க்ஸ் கடையில், வருடாந்திர சேலை விற்பனை நடத்தப்பட்டது. இதில் குறைந்த விலையில் சேலைகள் விற்கப்பட்டன. இதனால் பெண்கள் நூற்றுக்கணக்கில் குவிந்து விட்டனர். இதனால் பெரும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு சேலைகளை தேர்வு செய்தனர்.

இந்த நிலையில் இரண்டு பெண்களுக்கு இடையே திடீரென மோதல் மூண்டது. ஒரே சேலையை இருவரும் தேர்வு செய்ததால் வந்த சண்டை இது. முதலில் வாக்குவாதமாகத்தான் அது இருந்தது. பின்னர் திடீரென இருவரும் அடித்துக் கொண்டனர். ஒருவர் தலையை மற்றவர் பிடித்து இழுக்க, அவர் அலற.. பதிலுக்கு இவர் பிடித்து இழுத்து அவர் அலற என அந்தஇடமே போர்க்களமானது. ஒரே இடத்தில் நின்று சண்டை போட்டாலும் பரவாயில்லை. அங்குமிங்கும் ஓடியபடி வேறு இருவரும் அடித்துக் கொண்டனர்.

கடைக் காவலர்கள் விரைந்து வந்து இரு பெண்களையும் சிரமப்பட்டு பிரித்து விட்டனர். அப்படியும் இருவரும் விடவில்லை. கத்திக் கொண்டே அடிக்க அடிக்க பாய்ந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் வந்த பெண்கள் இருவரையும் கட்டுப்படுத்தி, சேலை எடுத்தது போதும், வாங்க வீட்டுக்குப் போவோம் என்று கூறி  அங்கிருந்து கூட்டிச் சென்றனர். 

இப்படி இரண்டு பெண்கள் தலைமுடியை ஆய்ந்து சண்டை போட்ட அந்த பரபரப்பான சூழலிலும் கூட, அதைப் பற்றி கொஞ்சம் கூட பதட்டப்படாமல், கண்டு கொள்ளாமல்  மற்ற பெண்கள் கருமமே கண்ணாக சேலையை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டியதுதான் இந்த சண்டைக் காட்சியின் ஹைலைட்!

இப்படிப் பண்றீங்களேம்மா!