லோக்சபாவுக்குள் குதித்த 2 இளைஞர்கள்.. கலர் புகையை வீசியதால் பெரும் பரபரப்பு.. எம்.பிக்கள் பீதி!

Su.tha Arivalagan
Dec 13, 2023,06:12 PM IST

டெல்லி: நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 22வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து 2 இளைஞர்கள் வண்ணப் புகையை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


நாடாளுமன்ற வளாகம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதன் 22வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இன்று காலை தாக்குதலில் உயிர் நீத்த 9 பேரின் படங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம் போல கூடின. லோக்சபாவை துணை சபாநாயகர் ராஜேந்திர அகர்வால் நடத்தி வந்தார். அப்போது லோக்சபா பார்வையாளர் மாடத்திலிருந்து 2 இளைஞர்கள் உள்ளே குதித்தனர். அடுத்தடுத்து உள்ளே குதித்த இருவரும் காலில் மறைத்து வைத்திருந்த கலர் பொடியை எடுத்து வீசினர். அது மஞ்சள் நிறத்தில் புகை கிளம்பியது. கிட்டத்தட்ட கண்ணீர்ப் புகை போல அது இருந்தது.




இருவரில் ஒருவரை உடனே மடக்கிப் பிடித்தனர். இன்னொரு நபர் சபாநாயகர் இருக்கையை நோக்கி அங்குமிங்கும் ஓடினார். அவர்களின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சபை மார்ஷல்கள் உள்ளே விரைந்து வந்து அந்த நபர்களை போராடி மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவத்தால் லோக்சபா அப்படியே  ஸ்தம்பித்துப் போனது. பல எம்.பிக்கள் வேகம் வேகமாக வெளியேறினர். அனைவரும் பீதியடைந்து விட்டனர்.  இதேபோல நாடாளுமன்றத்திற்கு வெளியே கோஷமிட்டபடி போராட்டத்தில் குதித்த ஒரு பெண்ணையும் பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்தனர். இந்த 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.


நாடாளுமன்றத்திற்குள் நடந்த இந்த சம்பவம் மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடியாக பார்க்கப்படுகிறது.