தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள்.. நீலகிரி, கோயம்பத்தூர்.. டார்கெட் வைத்த கனமழை!

Manjula Devi
Jun 24, 2024,06:39 PM IST

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


குறிப்பாக நீலகிரி, கோவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும் இரவு நேரங்களில் நல்ல மழை பொழிந்து குளுமை நிலவி வருகிறது. இதனால் பல இடங்களில்  வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் 24ஆம் தேதி வரை மழை கனமழை நீடிக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.


இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி,


இன்று கனமழை:


நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய எட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஏழு முதல் 11 சென்டிமீட்டர் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்பகுதிகளில் கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நாளை,நாளை மறுநாள் அதிகன மழை:


நீலகிரி, கோவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு தினங்கள் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களிலும் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அதிகன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


நாளை, நாளை மறுநாள் கன மழை: 


திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி நெல்லை,  கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மையம்: 


தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஏழு நாட்கள் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.


அதேபோல் கேரளாவில் இன்றும் நாளையும் மிக கனமழையும், அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாம். இது தவிர கர்நாடகாவில் இன்று முதல் 5 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  அறிவித்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.