ராவோடு ராவாக.. "ப்ளூ டிக்"கை பிடுங்கிய டிவிட்டர்.. விஐபிக்கள் புலம்பல்!

Su.tha Arivalagan
Apr 21, 2023,09:32 AM IST
சென்னை: டிவிட்டரை வாங்கினாலும் வாங்கினார்.. இந்த எலான் மஸ்க் பண்ணும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது . ஒவ்வொரு நாளும் ஒரு பஞ்சாயத்து வைக்கிறது டிவிட்டர். இப்போது  பல பிரபலங்களின் ப்ளூ டிக் நேற்று இரவு முதல் மாயமாகியுள்ளது.

டிவிட்டரில் பல்வேறு மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறார் எலான் மஸ்க். முன்பெல்லாம் ப்ளூ டிக் என்பது சில தகுதிகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு வந்தது. அதை தற்போது காசு கொடுத்தால்தான் ப்ளூ டிக் என்று மாற்றி விட்டார் எலான் மஸ்க். இதனால் பலருக்கும் ப்ளூ டிக் கிடைத்து அதிர வைத்தார்கள்.

அதன் பிறகு ஆரஞ்சு டிக் அது இது என்று என்னென்னவோ வந்து விட்டது. இசையில் டிவிட்டரின் லோகோவை அதிரடியாக மாற்றி நாய்ப் படத்தை வைத்தார் மஸ்க். ஆனால் ஒரே நாள்தான் அதுவும்.. அடுத்த நாளே மீண்டும் அந்த சிட்டுக் குருவி வந்து விட்டது. இப்போது இன்னொரு குழப்பம்.



நிறைய பயன்பாட்டாளர்களுக்கு திடீரென ப்ளூ டிக் மாயமாகியுள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய், பிரகாஷ் ராஜ், குஷ்பு, கிரிக்கெட்டர்கள் தோனி, விராட் கோலி, சிம்பு உள்பட பலரும் ப்ளூ டிக்கை இழந்துள்ளனர். இதை டிவீட் போட்டு அவர்கள் புலம்பலாகவும் வெளியிட்டுள்ளனர். சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கு மட்டும் தான் ப்ளூ டிக் வழங்கப்படும். மற்றவர்களுக்கு கிடையாது என எலன் மஸ்க் கொண்டு வந்துள்ள புதிய ரூல்ஸ் தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. 

பிரகாஷ் ராஜ் போட்டுள்ள ட்வீட்டில், பை பை ப்ளூ டிக்.  உன்னுடன் இருந்தது அருமையான அனுபவம்.  மக்களுடனான எனது பயணம் எனது உரையாடல்கள்  எனது பகிர்வு.. தொடரும்... நீ உன்னைப் பார்த்துக்கோ செல்லம்.. என்று தனது ஸ்டைலில் நக்கலாக ப்ளூடிக் பறிமுதலை கலாய்த்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

இதை வைத்து பலரும் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர். பல சாமானியர்களுக்கு ப்ளூ டிக் தொடருவதால், அவர்கள் பிரபலங்களைப் பார்த்து அடடா எனக்கு இருக்கு என் தலைவனுக்கு இல்லையே.. அப்ப நான்தான் ரியல் பிரபலமா என்று கிண்டலடித்துக் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

பாலிவுட், கோலிவுட், மல்லுவுட், சான்டல்வுட் என்று பல்வேறு துறை சினிமாப் பிரபலங்கள் பலரும் ப்ளூ டிக்கை இழந்துள்ளனர். சிலருக்கு மட்டும் இருக்கிறது. குறிப்பாக ராஜமவுலிக்கு இருக்கிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு போய் விட்டது. நம்ம ஆட்களுக்கு மட்டும் இல்லை, உலகம் முழுவதும் பல்துறை பிரபலங்கள் பலரும் ப்ளூ டிக்கை இழந்துள்ளனர்.