WOW.. பிறந்ததுமே பிரிக்கப்பட்டு.. ஒரே ஊரில் வசித்து.. 19 வருடங்களுக்குப் பிறகு இணைந்த இரட்டையர்கள்!
டிபிலிசி: பிறந்ததுமே பிரிக்கப்பட்ட இரட்டையர்களான சகோதரிகள், ஒரே ஊரிலேயே ஒருவரை ஒருவர் அறியாமல் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது 19 வருடங்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்துள்ள சம்பவம் ஜார்ஜியா நாட்டில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை இணைத்தது யார் தெரியுமா.. டிக்டாக் தான்!
The Parent Trap.. அப்படின்னு 1961ம் ஆண்டு ஒரு ஆங்கிலப் படம் வந்தது. அதில் இரட்டையர்களான சகோதரிகள் சிறு வயதிலேயே பிரித்து தாயுடன் ஒருவரும், தந்தையுடன் ஒருவரும் என பிரிந்து வாழ்வார்கள்.. ஆனால் ஒரே பள்ளியில் படிக்க சேரும்போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து தாங்கள் யார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைவார்கள். பின்னர் பெற்றோரை சேர்த்து வைக்க வீடு மாறிச் சென்று பெற்றோரை சேர்த்து வைப்பார்கள்.
எங்கேயோ கேட்ட கதையா இருக்கேன்னு தானே யோசிக்கறீங்க.. இதை கதையைத்தான் 1965ம் ஆண்டு குழந்தையும் தெய்வமும் என்ற பெயரில் தமிழில் படமாக்கினார்கள். அழகான குட்டிப் பாப்பா வேடத்தில் இரட்டை வேடத்தில் குட்டி பத்மினி அசத்தலாக நடித்திருப்பார். ஜெய்சங்கர், ஜமுனா நடிப்பில் வெளியான இப்படம் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது.
இந்தப் படத்தில் வருவது போலவே ஒரு சம்பவம் ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவில் நடந்துள்ளது. ஜார்ஜியாவைச் சேர்ந்த அமி கிவிட்டியா மற்றும் அனோ சர்டானியா சகோதரிகள் பிறப்பிலேயே பிரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஒரே ஊரில் தனித் தனியாக வசித்து வந்துள்ளனர். தற்போது 19 வயதாகும் இருவரும் டிக்டாக் வீடியோ மூலம் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி, தாங்கள் யார் என்பதை உணர்ந்து இப்போது இணைந்துள்ளனர்.
பிபிசியில் இவர்களது கதை வெளியாகியுள்ளது. இந்த இருவரும் பிறந்ததுமே மருத்துவமனையிலிருந்து திருடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜியா நாட்டில் மருத்துவமனைகளில் குழந்தைகள் திருடப்படுவது சகஜமானது. இந்த சகோதரிகள், பெற்ற தந்தையாலேயே, பெரும் தொகைக்கு விற்கப்பட்டவர்கள். இருவரும் இப்போது இணைந்துள்ளனர்.
கடந்த 2002ம் ஆண்டு இந்த சகோதரிகளின் தாயார் அஸா ஸோனி தனது இரட்டையர் மகள்களைப் பெற்றெடுத்தார். குழந்தைகள் பிறந்ததுமே அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமாவில் விழுந்து விட்டார். அஸாவின் கணவர் கோச்சா ககரியா, தனது இரு மகள்களையும் விலைக்குக் கேட்ட நபரிடம் அதை விற்க முடிவு செய்தார். இரு குழந்தைகளும் வேறு வேறு குடும்பத்துக்கு விற்கப்பட்டு விட்டன.
அனோ தலைநகர் டிபிலிசியில் வளர்ந்தார். அவரது சகோதரி அமி, அருகில் உள்ள ஜுக்திதி என்ற நகரில் வளர்ந்தார். 12 வயதாகும்போது இருவரும் ஒரு நடன நிகழ்ச்சியில் சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் ஒரே மாதிரி இருப்பதாக உணர்ந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு அதற்கு மேல் எந்த விவரமம் தெரியவில்லை.
தொடர்ந்து இருவரும் நட்பாக இருந்துள்ளனர். டிக்டாக்கில் வீடியோ செய்தபோதுதான் இருவருக்கும் இடையே ஏதோ பந்தம் இருப்பதாக உணர்ந்துள்ளனர். இதையடுத்து தங்களது பூர்வீகம் குறித்து தேடத் தொடங்கியபோதுதான் உண்மை தெரிய வந்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். இப்போது இந்த இருவரும் இணைந்து விட்டனர்.