விஜய் இப்பத்தான் கரெக்டான ரூட்டை எடுத்திருக்கிறார்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பின் பின்னணி!
சென்னை: தன்னை வைத்தும் தனது கட்சியை வைத்தும் ஏகப்பட்ட அரசியல் நடந்து வருவது குறித்து இப்போதுதான் விஜய் சுதாரித்திருப்பதாக தெரிகிறது. அவர் எடுத்துள்ள இந்த முடிவை இன்னும் ஸ்டிராங்காக்கி அழுத்தம் திருத்தமாக தனது நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படையாக அறிவித்து செயல்படுவாரேயானால் வரும் தேர்தலில் அவருக்கான ஆதரவு வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அவருக்குக் கிடைக்க வாய்ப்புண்டு.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. விஜய் மாற்றத்தைத் தருவார் என்ற பெரிய நம்பிக்கையில் மக்களில் பலர் காத்திருக்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கூட்டணி குறித்த குழப்பம்
எல்லாவற்றையும் கரெக்டாக செய்து வந்த விஜய் ஒரு விஷயத்தில் மட்டும் சறுக்கினார். அதாவது தனது கொள்கை விளக்க மாநாட்டின்போது அவர் பேசுகையில் கூட்டணி ஆட்சிக்கு ரெடி, ஆட்சியில் பங்கு தருவோம் என்று அவர் சொன்னது அவருக்கு எதிராக திரும்பி விட்டது. அதாவது, அவருக்கு ஆதரவாக முக்கியமான வாக்கு வங்கிகளைக் கொண்ட கட்சிகள் தவெகவை நோக்கி வேகமாக வருவதற்கு அந்த பேச்சு தடையாக மாறி விட்டது.
காரணம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தவெக மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கிறது. ஆனால் விஜய் பேச்சுக்கு வேகமாக வந்து எதிர்ப்பு தெரிவித்தார் திருமாவளவன். தொடர்ந்து அவர் ஆவேசமாகவே பேசி வந்தார். இதனால் தவெக, விடுதலைச் சிறுத்தைகள் இணைவது என்பது கனவாகி விட்டது. அந்த விஷயத்தை விஜய் பூடகமாக வைத்திருக்க வேண்டும். பகிரங்கமாக அறிவித்திருக்கக் கூடாது என்பதே பலரின் கருத்தாக இருந்து வந்தது.
அதேபோல நாம் தமிழர் கட்சியும், தவெகவுடன் நெருங்குவதை தவிர்த்து விட்டு வேகமாக விலகிப் போய் விட்டது. அதை தவெகவினரும் சந்தோஷமாகவே எடுத்துக் கொண்டனர். இதனால் அந்தப் பிரச்சினையும் ஓய்ந்து போனது.
ஆனால் தவெக - அதிமுகவை வைத்து ஒரு அரசியல் நடந்து வந்துத. அதிமுக, தவெக கூட்டணி அமைக்கப் போவதாகவும், அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடப்பதாகவும் செய்திகள் வெளியாகின. விஜய்க்கு துணை முதல்வர் பதவி தருவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டதாகவும், ஆனால் விஜய் கேட்ட தொகுதிகளைக் கொடுப்பதில் அதிமுகவுக்கு விருப்பம் இல்லை என்றும் செய்திகள் வெளியாகின. இதனால் தவெக கட்சியினரிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது.
தனித்துப் போட்டியிட தவெகவினரிடையே விருப்பம்
நமக்குத்தான் மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறதே.. மக்கள் தளபதிக்கு முதல்வர் பதவியையே தருவார்களே.. நாம் ஏன் அதிமுகவிடம் போய் கெஞ்ச வேண்டும். தளபதி தவறான பாதையில் போகிறாரோ என்ற எண்ணம் கட்சியினர் மத்தியில் நிலவி வந்தது. ஆனால் இது மட்டுமல்லாமல், வேறு பல செய்திகளும் கூட தவெகவை மையமாக வைத்து வலம் வந்ததால் கட்சியினர் மத்தியில் பெரும் குழப்பமே நிலவி வந்தது.
தவெக தரப்பில் ஆக்டிவான செயல்பாடுகள் இன்னும் வெளிப்படையாக இல்லாததால்தான் இந்தக் குழப்பம் நிலவுகிறது. அதிகாரப்பூர்வமாக ஒரு செய்தித் தொடர்பாளரோ அல்லது தலைவர்கள் யாரேனுமோ இல்லாததால்தான் எந்த பிரச்சினைக்கும் உடனுக்குடன் பதில் சொல்லி தெளிவுபடுத்த முடியாத நிலை நிலவுகிறது. இந்த நிலையில்தான் அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சு தவறானது என்று, விஜய் ஒப்புதலுடன் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் கொடுத்துள்ளார். இதன் மூலம் பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
தனது கட்சியை முதன்மைக் கட்சி என்று புஸ்ஸி ஆனந்த் இந்த அறிக்கையில் முக்கியமாக குறிப்பிட்டுள்ளார். அதை வைத்துப் பார்க்கும்போது தவெக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்பது தெளிவாகியுள்ளது. அப்படிப் பார்த்தால் நிச்சயம் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை. பாமகவும் வருமா என்று தெரியவில்லை. தேமுதிகவும் வருமா என்பதும் சந்தேகம். எனவே விஜய் அமைக்கப் போகும் கூட்டணியில் யார் இடம் பெறுவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
அதேசமயம், விஜயகாந்த் போல நாமும் அதிரடியாக தனித்துப் போட்டியிட வேண்டும். மக்கள் பெரும் மாற்றத்தை எதிர்பார்த்தே நமக்கு முழுமையாக ஆதரவு தருகிறார்கள். விக்கிரவாண்டியில் கூடிய கூட்டமே அதற்கு சான்று. எனவே நாம் தைரியமாகவும், துணிச்சலோடும் நம்பிக்கையோடும் தனித்துப் போட்டியிட்டு அத்தனை கட்சிகளையும் அதிர வைக்க வேண்டும். பலமிழந்து போய் நிற்கும் அதிமுகவை நம்பி போய் ஏமாந்து விடக் கூடாது. விஜயகாந்த் இப்படித்தான் ஜெயலலிதாவை நம்பி ஏமாந்தார். நாமும் அதேபோல ஏமாறக் கூடாது. ஆரம்பத்திலேயே சுதாரிப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் தவெக கட்சியினர் உள்ளனராம்.
சரியான நேரத்தில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விஜய் இப்போதுதான் சரியான ரூட்டைப் பிடித்திருக்கிறார். தொடர்ந்து நமது செயல்பாடுகள் அதிரடியாக அமைந்தால் நிச்சயம் நமக்கே வெற்றி என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்