செப்டம்பருக்கு வாய்ப்பில்லை.. அக்டோபர் 3வது வாரத்திற்குத் தள்ளிப் போகிறதா.. தவெக மாநாடு?

Meenakshi
Sep 12, 2024,05:11 PM IST

சென்னை: விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 23ம் தேதி நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அன்று முதல் தொடர்ந்து  கட்சியின் வளர்ச்சி பணிகள் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது. இந்த கட்சி பணிகளில் விஜய் மிகவும் யோசித்து ஒவ்வொரு செயலையும் செய்து வருகிறார். கடந்த மாதம் 22ம் தேதி கட்சியின் கொடி மற்றும் பாடல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் கட்சியின் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிவாண்டிக்கு அடுத்து உள்ள வி.சாலையில் மாநாடு நடந்த சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது. 




இந்த இடத்தில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்றும் கூறி, கடந்த மாதம் 28ம் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  தவெக கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் காவல்துறையினர் சார்பில் 21 கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு தவெக பதில் அளித்த நிலையில், மாநாடு நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். அதிலும், குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாநாடு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், காவல்துறை விதித்த நிபந்தனைகளை குறுகிய காலத்தில் நிறைவேற்ற முடியாது என்பதாலும், மாநாடு நடைபெறும் இடத்தில் பல்வேறு வசதிகளை தவெக ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளதால், வருகிற 23ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்த மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்டு, அக்டோபர் 23ம் தேதிக்கு மாநாட்டை தள்ளி வைத்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. 


இருப்பினும் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. மாநாடு நடைபெறும் தேதியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தான் அறிவிப்பார் என்று ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் மாநாடு குறித்த அறிவிப்பை விஜய்யே வெளியிட்டால்தான் தெளிவான தகவல் கிடைக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்