ஒன்றிய அரசு.. திரும்பத் திரும்ப உச்சரித்த நடிகர் விஜய்.. குபீர் மகிழ்ச்சியில் திமுகவினர்!

Su.tha Arivalagan
Jul 03, 2024,05:42 PM IST

சென்னை:   வழக்கமாக ஒன்றிய அரசு என்று திமுகவினர்தான் சொல்வார்கள். ஆனால் இன்று நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய் இந்த வார்த்தையை  திரும்பத் திரும்ப உச்சரித்ததை திமுகவினர் சற்றுத் திரும்பிப் பார்த்துள்ளனர். மற்ற கட்சிக்காரர்கள் குழப்பத்துடன் விஜய்யைப் பார்த்து வருகின்றனர்.


நடிகர் விஜய் எதற்காக கட்சி ஆரம்பிக்கிறார்.. யாருடைய தூண்டுதலிலாவது ஆரம்பிக்கிறாரா அல்லது அவரே சொந்தமாக ஆரம்பிக்கிறாரா.. அவரது கொள்கை கோட்பாடு என்ன.. என்ன செய்யத் திட்டம் வைத்துள்ளார் என்று பல கேள்விகள் அவர் கட்சி தொடங்கிய நாள் முதலே உலா வந்து கொண்டுள்ளன.


விஜய் அமைதியாக தனது வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு பல்வேறு கட்சியினரும் அவர்களாகவே பல கற்பனைகளையும் கட்டவிழ்த்து வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியுடன் விஜய் கூட்டணி சேரப் போவதாக அந்தக் கட்சியினர் அவர்களாகவே கூறி வருகின்றனர். அதேபோல திமுகவுக்கு எதிரான கட்சி விஜய் கட்சி.. என்று கூறி அதிமுகவினரும் விஜய்யை ஆதரித்துக் கொண்டுள்ளனர். பாஜகவினரும், விஜய் நமக்கு சாதகமானவர் என்று கருதி வருகிறார்கள்.




திமுக தரப்பிலோ, உஷாரான பார்வையுடன் விஜய்யின் நகர்வுகளைக் கவனித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி பரிசளிப்பு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்ட விஜய் தொடக்கத்தில் பேசினார். அப்போது நீட் தேர்வுக்கு எதிராக அழுத்தம் திருத்தமாக தனது கருத்துக்களை வைத்தார். இதற்கு முன்பு பல பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளார் விஜய். ஆனால் இன்று அவர் வைத்த நீட் குறித்த கருத்துக்கள் மிகத் தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும், சற்று விரிவாகவும் இருந்ததால் பலரும் இதை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.


குறிப்பாக இன்று விஜய் உச்சரித்த ஒரு வார்த்தை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதுதான் ஒன்றிய அரசு. திமுகவினரும், திமுக ஆதரவாளர்களும்தான் இந்த வார்த்தையை பொதுவாக உச்சரிப்பார்கள். அதிமுகவோ, பாஜகவோ இதற்கு முற்றிலும் நேர்மாறான கருத்து கொண்டவர்கள். ஆனால் இன்று நீட் தேர்வு குறித்த பேச்சின்போது தொடர்ந்து ஒன்றிய அரசு என்றுதான் உச்சரித்தார் விஜய். மறந்தும் கூட அவர் மத்திய அரசு என்று சொல்லவே இல்லை. இது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.


மேலும் தனது பேச்சின்போது தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை முழு மனதாக ஆதரிப்பதாகவும் அதிரடியாக கூறினார் விஜய். இந்த பேச்சு மற்றும் ஒன்றிய அரசு என்று கூறியதன் மூலம் நான் திமுகவுக்கு எதிரானவன் அல்ல.. அப்படி என்னை சித்தரிப்பதும் சரியில்லை என்று மறைமுகமாக விஜய் உணர்த்தியுள்ளாரா என்று தெரியவில்லை. இதுதான் விஜய்யின் கருத்தாக இருக்கக் கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.


கடந்த கூட்டத்தில் விஜய் பேசியது திமுக அரசுக்கு எதிரானதாக இருந்ததாக ஒரு கருத்து கிளம்பியது. ஆனால் இன்று பேசிய பேச்சு முழுக்க முழுக்க திமுக அரசுக்கு தெம்பு கொடுப்பது போல இருந்தது என்பது முக்கியமானது.


தளபதி மனசுல என்ன இருக்குன்னே புரியலையேண்ணே!