நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

Manjula Devi
Feb 26, 2025,05:26 PM IST
சென்னை: நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் சிலருக்கு எரிச்சல் வரத்தானே செய்யும். இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கூறியுள்ளார்.

சென்னை மாமல்லபுரம் அருகே நடந்த தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு விஜய் உரையாற்றினார். இதற்கு முன்பு இருந்தது போலவே இந்தப் பேச்சிலும் நக்கல் நய்யாண்டிகள் கலந்து கிடந்தன. விஜய் உரையிலிருந்து:

என் நெஞ்சில் குடியிருக்கும் எல்லோருக்கும் எனது வணக்கம். இந்த அரசியல் என்றாலே வேற லெவல் தான். இந்த அரசியலில் மட்டும் தான் வித்தியாசமாக ஒன்றை பார்க்கிறோம். யாரை யார் எப்ப எதிர்ப்பாங்க என்று தெரியாது. யாரு யாரை எப்ப ஆதரிப்பாங்க என்றும் தெரியாது. அதை கணிக்கவும் முடியாது. அரசியலுக்கு யார் வேணாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை என கூறுகிறோம்‌. ஆனால் மக்களுக்கு பிடித்துப்போன ஒருவன் அரசியலில் வருகிறான் என்றால் கண்டிப்பாக நல்லவர்கள் எல்லாம் வரவேற்பார்கள். ஆனால் ஒரு சிலர்க்கு மட்டும் எரிச்சல் வரும் தானே. அது இருக்கத்தானே செய்யும். 

பொய் சொல்ல முடியாதே என்று எரிச்சல்



இதுவரை நாம் சொல்லுகின்ற பொய் எல்லாம் நம்பி நமக்கு ஓட்டு போட்டார்கள். ஆனால் இப்ப வந்து இவன் சொல்கிறதை பார்த்தால் மக்கள் மனதிற்கு ரொம்ப நெருக்கமாக இருக்கிறதே. அதுவே நமக்கு மிகவும் நெருக்கடியாக இருக்கிறதே. இவனை என்ன செய்யலாம் எப்படி இவனை க்ளோஸ் பண்ணலாம் என ஒரு குழப்பம் வரும். அந்த குழப்பத்தில் கத்துறதா கதறதா என்ன பண்றது என்று தெரியாமல் இப்ப வரவன் எல்லாம் கட்சி  ஆரம்பிக்கிறான் என சொல்லி இப்படியெல்லாம் பேச ஆரம்பிப்பாங்க .இப்ப ஆட்சியில் இருக்கிறவங்க என்று பேசுறாங்க இல்லையா அந்த மாதிரி தான். 

இப்படிப்பட்ட அரசியல் களத்தில் கொஞ்சம் கூட ஒரு பயம் இல்லாமல் பதற்றமில்லாமல் வர எதிர்ப்புகள் எல்லாம் லெப்ட் ஹாண்டில் டீல் பண்ணிக்கிட்டு இதோ நமது தமிழக வெற்றி கழகம் முதலாவது ஆண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. இது நமக்கு முக்கியமான காலகட்டம் ஏனென்றால் ஒரு அரசியல் கட்சிக்கு ஒரு பெரிய பலமே அந்த கட்சியினுடைய கட்டமைப்பு தான். அதுதான் அந்த கட்சியினுடைய வேர் மாதிரி. அதுதான் அது கட்சியின் அடிப்படை பலம். ஒரு ஆலமரம் மாதிரி ஒரு கட்சி வளர வேண்டும் என்றால் அந்த வேர்களும் விழுதுகளும் ஸ்ட்ராங்கா இருக்க வேண்டும். அப்படிதான் நமது அமைப்பை பலப்படுத்திக்கின்ற வேலையை நாம் இப்போது செய்திருக்கிறோம். 

ஏன் இளைஞர்கள் வரக் கூடாதா!



தமிழகத்தில் மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அறிவித்து இருக்கிறோம். இந்த நேரத்தில் நமது மீது ஒரு கம்ப்ளைன்ட். அது என்ன என்றால் நமது மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் இளைஞர்கள் ஆகவே இருக்கிறார்கள். ஏன் இருந்தால் என்ன..? அறிஞர் அண்ணா அவர்கள் கட்சி ஆரம்பித்தபோது அவர்கள் பின்னாடி நின்றதும்.. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கட்சி ஆரம்பித்து போது அவர்கள் பின்னே நின்றதும் இளைஞர்கள் தானே‌. அந்த இளைஞர்களால் தான் 1967, 1977 ,அந்த ரெண்டு தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதுதான் வரலாறு. 

நமது மீது இன்னொரு கம்ப்ளைன்ட். நமது கட்சி நிர்வாகிகள் எல்லாம் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவங்கள் என்று. ஏன் வரக்கூடாதா. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் மிக உயரத்தில் சாதித்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நமது கட்சி எளிய மக்களுக்கான கட்சி தானே. அப்படி நமது கட்சி நிர்வாகிகளும் எளிய குடும்பத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். 

இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது



நமது கட்சி பணையாளர்களுக்கான கட்சி கிடையாது. முன்னாடி காலத்தில் பண்ணையார்கள் தான் தலைவர்களாக இருப்பார்கள். இப்போது பதவியில் இருப்பவர்கள் எல்லோரும் பண்ணையார்களாக மாறி விடுகிறார்கள். மக்களுடைய நலனை பற்றியும், நாட்டின் நலனை பற்றியும் வளர்ச்சியை பற்றியும், எதைப்பற்றியும், கவலைப்படாமல் எப்போதும் பணம்  பணம் பணம்..  இப்படிப்பட்ட பண்ணையார்களை அரசியலிருந்து வேறோடு அகற்றுவதான் நமது கட்சியின் நோக்கம். அதனை ஜனநாயக வழியில் சந்திக்க வேண்டும்.

அதனால் தான் நாம் 2026 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்க இருக்கின்றோம். கூடிய சீக்கிரமே பூத் கமிட்டி மாநாடு என்று நடத்தப் போகிறோம். அன்னைக்கு தெரியும் தமிழக வெற்றி கழகம் எந்த ஒரு பெரிய கட்சிக்கும் சளைத்ததல்ல என்று. அன்னைக்கு தெரியும் தமிழக வெற்றி கழகம் தமிழ்நாட்டில் முதல் சக்தியாக முதன்மை சக்தியாக பவர்ஃபுல்லாக இருக்கும் என்று நம்புவார்கள். 

பாசிசமும் பாயாசமும் செட்டிங் சண்டை!



இப்ப புதியதாக ஒரு பிரச்சனை கிளம்பி இருக்கிறது. மும்மொழிக் கொள்கை. அதாவது தமிழ்நாட்டில் செயல்படுத்தவில்லை என்றால் கல்விக்கான நிதியை நமது மாநில அரசுக்கு கொடுக்க மாட்டார்களாம். இந்த எல்கேஜி யுகேஜி பையன்கள் சண்டை போட்டுக்கிறார்கள் தெரியுமா. அது போன்று தான் இது இருக்கிறது. கொடுக்க வேண்டிய என்பது அவர்களின் கடமை. வாங்க வேண்டும் என்பது இவர்களின் உரிமை. ஆனால் இவர்கள் இரண்டு பேரும்.. எவ்வளவு சீரியஸா ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது. அதாங்க நமது பாசிசமும் பாயாசமும். நமது அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் தான். 

இரண்டு பேரும் பேசி வைத்துக் கொண்டு இந்த செட்டிங் எல்லாம் பண்ணி வைத்துக் கொண்டு மாத்தி மாத்தி சோசியல் மீடியாவில் hashtags போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இருவரும் அடித்துக்கிற மாதிரி அடித்துக் கொள்வார்களாம் அதை நாம் நம்ப வேண்டுமாம். நம்ப வேண்டுமா.. வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ. இதுக்கு நடுவில் நம்ம பசங்கள் டிவிகேபார்டிஎன்-ன்னு. யார் சார் நீங்க எல்லாம். ஸ்லீப்பர் செல்ஸ் மாதிரி.

மக்களுக்கு எல்லாமே தெரியும்




மக்களுக்கு நாம் சொல்லி புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கே தெரியும் நமது ஊரு சுயமரியாதை உள்ள ஊரு. சுயமரியாதைக்காக யாரையும் எதற்காக விட்டுக் கொடுக்க மாட்டார்கள். நாம் எல்லா மொழியையும் மதிப்போம். அதில் மாற்றுக்கருத்துகள் கிடையாது. தனிப்பட்ட முறையில் யார் வேணாலும் எந்த மொழியில் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மொழிக் கொள்கையை கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறொரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால் அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால் அது எப்படி ப்ரோ. 

அதனால் நமது தமிழக வெற்றி கழகம் சார்பாக நாமளும் இந்த பொய் பிரச்சாரங்கள் எல்லாம் புறம் தள்ளிவிட்டு இதனை உறுதியாக எதிர்ப்போம். கான்ஃபிடன்ட்டா இருங்க நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் மீண்டும் சந்திக்கும் வரை நன்றி என்று பேசினார்.