வெள்ளை குல்லா, லுங்கி, சட்டையில் விஜய்.. ஆயிரக்கணக்கானோருடன் தொழுது இப்தார் விருந்தில் பங்கேற்பு!

Su.tha Arivalagan
Mar 07, 2025,07:49 PM IST

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் நடந்த இப்தார் விருந்தில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய் தலையில் வெள்ளைக் குல்லா, வெள்ளை லுங்கி மற்றும் வெள்ளைச் சட்டை அணிந்து வந்து வந்து பங்கேற்றார். ஆயிரக்கணக்கானோருடன் சேர்ந்து தொழுகையில் ஈடுபட்ட அவர் பின்னர் இப்தார் விருந்தில் கலந்து கொண்டார்.


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இப்தார் விருந்து அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 2000 பேர் பங்கேற்க  அழைப்பு விடுக்கப்பட்டது. தவெக சார்பில் இப்தார் விருந்து நடந்தாலும் கூட கட்சி அடையாளம் எதுவும் இருக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறி விட்டார் விஜய்.


இதனால் கட்சி துண்டு, கொடி உள்ளிட்ட எந்தவிதமான அடையாளமும் இல்லாமல் தவெக நிர்வாகிகளும், இப்தாருக்கு அழைக்கப்பட்ட கட்சியினரும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விருந்துக்காக பிரியாணி உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகளும் மைதான வளாகத்திலேயே தயாரிக்கப்பட்டன. 




விஜய் பாதுகாப்புக்காக வழக்கம் போல பவுன்சர்கள் களம் இறக்கப்பட்டனர். மாலை 5.30 மணியளவில் விஜய் நிகழ்ச்சி நடக்கும் மைதானத்திற்கு வந்து சேர்ந்தார். வெள்ளை நிற குல்லா அணிந்திருந்த அவர் வெள்ளை நிற லுங்கி மற்றும் வெள்ளைச் சட்டையில் வித்தியாசமான கெட்டப்பில் காணப்பட்டார்.


இப்தார் விருந்தில் பங்கேற்றோருடன் இணைந்து நோன்பு திறப்பில் கலந்து கொண்ட விஜய், தொழுகையிலும் கலந்து கொண்டு தொழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.