எனது கள அரசியல் பரந்தூரிலிருந்து தொடங்கி விட்டது.. உங்களுடன் கடைசி வரை நிற்பேன்.. விஜய்
சென்னை: உங்களோட காலடி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுத்தான் என்னோட பயணத்தைத் தொடங்க முடிவோட இருந்தேன். அதற்கு சரியான இடம் இதுதான்னு தோணுச்சு. என்னோட கள அரசியல் பயணம் உங்களோட ஆசிர்வாதத்தோடு இங்கிருந்து தொடங்குகிறது. இறுதி வரை பரந்தூர் மக்களோடு இருப்பேன் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டக் குழுவினரை சந்திக்க பரந்தூர் கிராமத்திற்கு விஜய் இன்று வந்தார். பரந்தூருக்குள் வர அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதால் அருகில் உள்ள மேல்பொடவூர் பகுதியில் உள்ள வீனஸ் கல்யாண மண்டப வளாகத்தில் வைத்து இன்று விஜய் 13 கிராம மக்களை சந்தித்தார்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் திறந்த வேனில் நின்றபடி விஜய் பேசினார். தனது கட்சித் துண்டை கழுத்தில் போட்டபடி விஜய் பேசினார். அவரது பேச்சில் ஆவேசம் தெறித்தது. விஜய் பேச்சு:
கிட்டத்தட்ட 910 நாட்களா நீங்க போராடிட்டு இருக்கீங்க. உங்களோட ஊர் பிரச்சினை குறித்து ராகுல் என்ற சின்னப் பையன் பேசியதைக் கேட்டேன். அது என்னமோ செய்தது. அதைக் கேட்டதும் உடனடியாக உங்களைப் பார்க்கணும்னு தோணுச்சு, உங்களுடன் நிற்பேன், தொடர்ந்து நிற்பேன்னு சொல்லத் தோணுச்சு.
நம்ம நாட்டுக்கு முக்கியமானவர்கள் விவசாயிகள்தான். அப்படிப்பட்ட உங்களின் காலடி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுத்தான் என்னோட பயணத்தைத் தொடங்க முடிவோட இருந்தேன். அதுக்கு சரியான இடம் இதுதான்னு தோணுச்சு. உங்க வீட்டுல உள்ள மகனா என்னோட கள அரசியல் பயணம் உங்களோட ஆசிர்வாதத்தோடு இங்கிருந்து தொடங்குது.
எனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில கட்சிக் கொள்கையை எடுத்துக் கூறினேன். இயற்கை வளப் பாதுகாப்பு. இதை நான் சொல்லக் காரணம், ஓட்டரசியலுக்காக அல்ல. அதேபோல விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம். அதில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று அதில் வலியுறுத்தினேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும், விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்னு சொன்னோம். அதை இப்போது உறுதியாக வலியுறுத்துகிறேன். உங்களுடன் உறுதியாக இருப்பேன்.
மத்திய மாநில அரசுகளுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. விமான நிலையம் வர வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்த இடத்தில் வேண்டாம்னுதான் சொல்றேன். இதைச் சொல்லாவிட்டால், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கதையைக் கட்ட ஆரம்பித்து விடுவார்கள். அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை.
எள்லா உயிரினங்களோட இருப்பையும் புவி வெப்பயமயாதல் பயமுறுத்திட்டு இருக்கு. மழைக்காலத்தில் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. சமீபத்திய ஆய்வில் ஒவ்வொரு வருடமும் வரும் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்க, சதுப்பு நிலங்களை அழித்ததுதான் என்று சொல்லுது. 90 சதவீத விவசாய நிலைகள், நீர்நிலைகளை கொண்டுள்ள இந்தப் பகுதியை அழிக்கும் முடிவை எந்த அரசு எடுத்தாலும், அது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்க முடியும்.
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்தது. அதை நான் மனப்பூர்வமாக வரவேற்றேன். அதே நிலைப்பாட்டைத்தானே பரந்தூரிலும் எடுத்திருக்க வேண்டும். எடுக்கணும். அரிட்டாபட்டி மக்கள் எப்படி நம்ம மக்களோ அதேபோலத்தானே பரந்தூர் மக்களும் நம்ம மக்கள். அப்படித்தானே அரசு யோசிக்கணும். ஆனால் அப்படி செய்யலையே. ஏன்னா இந்த விமான நிலையத்தையும் தாண்டி அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கு. அதை நம்ம மக்கள் தெளிவா புரிஞ்சு வச்சிருக்காங்க.
ஆட்சியாளர்களுக்கு சில கேள்விகள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலையை எதிர்த்தீங்க. அதே நிலைப்பாட்டைத்தானே இங்கேயும் எடுக்கணும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்க கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பா. இது புரியலையே. நாடகத்தைப் பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டாங்க. உங்க வசதிக்காக அவங்களோட நிற்பதும், நிற்காமல் இருப்பதும் என நாடகம் ஆடுவதும் ஆடாமல் இருப்பதும், நம்புவது போல நாடகமாடுவதில்தான் நீங்க கில்லாடியாச்சே. அதையும் மீறி விவசாயிகள் போராடினால் பிரச்சினைதான். நாடகத்தைப் பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டாங்க. இந்த விமான நிலையத்துக்காக ஆய்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
விவசாய நிலங்கள் இல்லாத, பாதிப்புகள் இல்லாத இடமாக பார்த்து விமான நிலையத்தைக் கொண்டு வாங்க. வளர்ச்சிதான் மக்களின் முன்னேற்றம். வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும். உங்களோட கிராம தேவதைகள் மேலே நீங்க நம்பிக்கை வச்சிருக்கீங்க. அந்த நம்பிக்கையை விட்ராதீங்க. உங்களுக்காகவும், உங்களது ஊருக்காகவும், உங்க வீட்டுப் பிள்ளையான நானும், தவெக தோழர்களும் சட்டத்திற்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களுடன் இறுதியாக நிற்போம்.
உங்களை ஊருக்குள்ள அந்தத் திடலில்தான் சந்திக்க விரும்பினேன். அனுமதி கிடைக்கலை. ஏன் தடைன்னு தெரியலை. நம்ம பிள்ளைங்க நோடடீஸ் தர தடை விதிச்சாங்க. துண்டுச் சீட்டு கொடுத்ததுக்கு தடை. ஏன்னு தெரியலை. நம்பிக்கையோட இருங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீணடும் உங்க ஊருக்குள்ள உங்களை சந்திக்க நான் வருவன் என்றார் விஜய்.
விஜய் பேசி முடித்ததும், கிராம மக்கள் சார்பாக பச்சைத் துண்டு அணிவிக்கப்பட்டது. நெல்மணிகளையும் கொடுத்து கிராம மக்கள் வரவேற்ற்றனர். வருங்கால முதல்வர் என்று கூறி மக்கள் கோஷமிட்டு வாழ்த்தினர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்