வேங்கைவயல் விவகாரம்.. சிபிஐ விசாரணை தேவையில்லை.. எஸ்ஐடி விசாரணை வேண்டும்.. விஜய்
சென்னை: வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும். சிபிஐ விசாரணை நடத்தினால் மேலும் தாமதமாகும் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திருமாவளவன், அண்ணாமலை உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று விஜய் கூறியிருப்பது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இதுதொடர்பாக இன்று விஜய் வெளியிட்ட அறிக்கை:
வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்!
ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை.
வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது.
வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேங்கைவயல் விவகாரம்.. 3 பேருக்குத் தொடர்பு.. குற்றப்பத்திரிக்கை தாக்கல்.. தமிழ்நாடு அரசு
வேங்கைவயல்.. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகளா.. திருமாவளவன் அதிர்ச்சி
வேங்கைவயல் .. தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.. தமிழ்நாடு அரசு கோரிக்கை
வேங்கை வயல்.. சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும்.. அண்ணாமலை
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்