பெரியார் வலியுறுத்திய.. சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிப்போம்.. விஜய்

Meenakshi
Sep 17, 2024,02:00 PM IST

சென்னை:  தென்னகத்தின்  சாக்ரடீஸ், தந்தை பெரியார்  அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண்  உரிமை, பெண்கல்வி,  பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க  உறுதியேற்போம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.


பெரியார் என்று பலராலும் அறியப்படுபவர் ஈ.வெ.இராமசாமி. இவர் 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி ஈரோட்டில் பிறந்தவர். சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.தந்தை பெரியார் பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் சமூக நீதி நாளாக கடந்த 2021ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாளுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில், 




சாதி, மத ஆதிக்கம் மற்றும் 

மூட பழக்க வழக்கங்களால் 

விலங்கிடப்பட்டுக்  கிடந்த தமிழக 

மக்களிடையே விழிப்புணர்வை 

விதைவித்தவர்;

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 

என்ற சுய விடுதலை வேட்கையின் 

மூலம், ஏற்றத்தாழ்வுகளால் 

உண்டாக்கப்பட்ட அடிமைத்

தளைகளை அறுத்தெறிந்தவர்;

மக்களைப் பகுத்தறிவு 

மனப்பான்மையுடன் போராடத் 

தூண்டியவர்; சமூகச் 

சீர்திருத்தவாதி, பாகுத்தறிவுப்

பகலவன், தென்னகத்தின் 

சாக்ரடீஸ், தந்தை பெரியார் 

அவர்களின் பிறந்த நாளில்,

அவர் வலியுறுத்திய பெண் 

உரிமை, பெண்கல்வி, 

பெண்கள் பாதுகாப்பு,

சமத்துவம், 

சம உரிமை, 

சமூக நீதிப் 

பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.


தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய்யின் கொள்கை என்ன என்பது குறித்து இதுவரை தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் பெரியாரின் வழியைப் பின்பற்றுவோம் என்று அவர் கூறியிருப்பதன் மூலம் திராவிட கொள்கையையே அவரும் கையில் எடுக்கப் போகிறாரோ என்ற ஆர்வத்தைக் கிளறி விட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்