விக்கிரவாண்டியில் போட்டியில்லை.. யாருக்கும் ஆதரவும் இல்லை.. த.வெ.க. புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!

Manjula Devi
Jun 18, 2024,02:37 PM IST

சென்னை:   விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.


கடந்த  பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார் தளபதி விஜய். அப்போது வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு . அதுவரை தான் கமிட்டான படங்களில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்குவதாக ஏற்கனவே நடிகர் விஜய் தெரிவித்திருந்தார். இதற்காக தவெக கட்சி நிர்வாகிகள் உள்கட்டமைப்பு பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.


விக்கிரவாண்டி தொகுதியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி விக்ரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்காக திமுக சார்பாக அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா, பாஜக சார்பாக சி .அன்புமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.




இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பை அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழக வெற்றிக்கழகக் தலைவர் தளபதி விஜய் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வெளியிட்ட கட்சி தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 


கழகத் தலைவர் அவர்கள் விரைவில் கழகத்தின் கொள்கைகள் கோட்பாடுகள் மற்றும் செயல் திட்டங்களை தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு அதன் தொடர்ச்சியாக கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவது தான் தமது பிரதான இலக்கு என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார்.


எனவே அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  குறிப்பாக வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்ரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவுமில்லை என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக் கொள்கிறேன் என  கூறியுள்ளார்.