விஜய் பெயருக்கு களங்கம் வரக் கூடாது.. ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்.. புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

Meenakshi
Sep 28, 2024,05:03 PM IST

விக்கிரவாண்டி:   விக்கிவாண்டியில் நடக்க உள்ள தவெக மாநாட்டிற்கு அடுத்த வாரம் பூமி பூஜை போடப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27ம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை அக்கட்சி தலைவர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகார பூர்வமாக அறிவித்தார். இதற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. காவல்துறையினர் வழங்கிய 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இதனை அடுத்து மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் பேசுகையில்,  விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அடுத்த வாரம் பூமி பூஜை போடப்பட உள்ளது. மாநாட்டில் பங்கேற்க வருபவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு ஒழுக்கத்தோடு வரவேண்டும். மாநாட்டின் போது கட்சிக்கும் விஜய்க்கும் எந்த களங்கமும் ஏற்படாத வண்ணம் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். மேலும் எந்த நாளாக இருந்தால் என்ன தலைவர் அளித்தால் போதும் அன்று கூட்டம் ஒன்று சேர்ந்துவிடும். இந்த மாநாட்டில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.


மாநாட்டின்போது பல்வேறு  பணிகளைப் பார்த்து்க கொல்ள 5,000 பேர் நியமிக்கப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகளுக்குத் தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட இருக்கின்றன. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களும் மக்களும் சட்டத்திற்கு உட்பட்டு கட்சிக்கும் தலைவர் விஜய்க்கும் எந்த களங்கமும் ஏற்படாமல் ஒழுக்கத்தோடு செயல்பட வேண்டும். மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்கு என்ன தேவைகள் என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும். 


இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக இருக்கும். நம் உயிர், மூச்சு, நாடி அனைத்தும் தளபதி தான். இந்த எழுச்சி 2026 வரை கண்டிப்பாக இருக்கும். தமிழக  வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி என்ன சொல்கிறாரோ அதைச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை. மாநாட்டை மிகச்சிறப்பாகச் செய்து காட்ட வேண்டும். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு தேவை என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்