தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

Manjula Devi
Feb 26, 2025,05:25 PM IST

சென்னை: தவெக ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் இன்று பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. தவெக கட்சியின் அரசியல் வியூக வகுப்பாளராக இணைந்துள்ள பிரஷாந்த் கிஷோருடன் இணைந்து மேடையில் தோன்றினார் விஜய்.


முன்னதாக, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள ஒய் பிரிவு பாதுகாப்புடன் மாஸாக தனது வீட்டிலிருந்து புறப்பட்ட விஜய்க்கு ரசிகர்கள் வழியெங்கும் திரளாக வரவேற்பு அளித்தனர். தற்போது தவெக ஆண்டுவிழா இனிதே தொடங்கியுள்ளது. இதில் விஜய் பேச போகும் பேச்சு குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.


தமிழக வெற்றி கழகம் முதலாமாண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு தொடக்க விழா  மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழா காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




இந்த விழாவை காண ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் அதிகாலை முதலே அலைகடலென  செல்ல ஆரம்பித்து விட்டனர். இதனால் சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் ஈசிஆர் சாலை முழுவதும் திருவிழா கோலம் களைட்டி உள்ளது. அதாவது விழா நடைபெறும் இடம் முழுவதும் தவெக கட்சி கொடிகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஆங்காங்கே விஜய் படம் இடம்பெற்ற‌

பேனர்களும் அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஈசிஆர் ரோடு முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் மத்திய மாநில அரசுகளை விமர்சித்தும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.


தனது வீட்டிலிருந்து கிளம்பி விழா நடக்கும் இடத்திற்கு புறப்பட்டு மாமல்லபுரம் நோக்கி வந்த விஜய்க்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் வரவேற்பு அளித்தனர். ஏற்றுக்கொண்ட விஜய் ரசிகர்களுக்கு கை அசைத்து கொண்டே வந்தார். 




விழா மேடைக்கு விஜய் வந்ததும், அவருக்கு கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு பிரஷாந்த் கிஷோருடன், இணைந்து மேடையில் இருந்தபடி தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார் விஜய். அதன் பின்னர் ,கெட் அவுட் என்ற ஹேஷ்டேக் இயக்கத்தை விஜய் கையெழுத்துப் போட்டுத் தொடங்கி வைத்தார். 


இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. இன்று விஜய் பேசும்போது, தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி, உள்ளிட்டவை குறித்து உரையாட இருப்பதாக கூறப்படுகிறது.


விழாவில் கலந்து கொள்ளும் கட்சி நிர்வாகிகளுக்கு வெஜிடபிள் பிரியாணி, சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், வறுவல், என 21 வகையான சைவ உணவுகள் தடபுடலாக தயாராகி வருகின்றன. குறிப்பாக  கேரளா ஸ்பெஷல் அடைப்பிரதமன் இடம் பிடித்துள்ளது.


செய்தியாளர்களைத் தாக்கிய பவுன்சர்கள்


இதற்கிடையே செய்தி சேகரிக்க வந்த சில செய்தியாளர்கள் மீது பவுன்சர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு செய்தியாளரின் வயிற்றில் ஓங்கிக் குத்தி கெட்ட வார்த்தையிலும் பவுன்சர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் நிலை குலைந்த அந்த செய்தியாளரை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


தாக்குதல் நடத்திய பவுன்சர்கள், விழா அரங்குக்குள் புகுந்து கதவுகளையும் மூடிக் கொண்டனர். இதனால் செய்தியாளர்கள் அனைவரும் திரண்டு கடுமையாக வாதிட்டனர். இதையடுத்து அங்கு வந்த கட்சி நிர்வாகிகளும், பிற பவுன்சர்களும் மன்னிப்பு கேட்டனர். செய்தியாளர்கள் என்று தெரியாததாலும், பவுன்சர்கள் வேற்று மொழிக்காரர்கள் என்பதால் மொழி தெரியாமல் தாக்கி விட்டதாகவும் அவர்கள் கூறினர்.


இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.