TVK.. விஜய் பேச்சால் யாருக்கு கலக்கம்.. அரசியல் கட்சிகளின் அடுத்த மூவ் எப்படி இருக்கும்?

Aadmika
Oct 28, 2024,11:57 AM IST

சென்னை : தவெகவின் முதல் மாநில மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு தமிழக அரசியல் கட்சிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக திமுக.,வில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த படியாக கலங்கி போய் இருப்பது பாஜக தான். இவர்கள் இருவரும் தான் விஜய் தங்களை தான் சுட்டிக் காட்டி பேசி உள்ளதாக ஓப்பனாகவே கூறி உள்ளார்கள்.


விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய விஜய், தன்னுடைய நிலைப்பாடு, கொள்கை, இலக்கு, எதிரி என்ன என்பது பற்றி தெளிவாக தெரிவித்து விட்டார். அது மட்டுமல்ல, தன்னை பற்றி இது வரை அரசியல் கட்சிகளும், சோஷியல் மீடியாவில் வெளி வந்த கமெண்ட்களையும் புள்ளிவிபரமாக பட்டியலிட்டு, பதிலளித்து விட்டு சென்று விட்டார். அதனாலேயோ என்னவோ விஜய் பேச்சுக்கு கமெண்ட்ஸ் என்று எதுவும் வராமல், விஜய் பேச்சிற்கு தங்கள் தரப்பு விளக்கம் என்ற ரீதியிலேயே திமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.


திராவிட மாடல் - முதல் எதிரி




விஜய் தன்னுடைய பேச்சில் நேரடியாக குறிப்பிட்டு, தாக்கி பேசியது திமுக.,வை தான். " திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். மக்கள் ஆட்சி என்ற பெயரில் குடும்ப ஆட்சி நடத்தி ஊழல் செய்பவர்கள் தான் எங்களின் முதல் எதிரி" என்று திமுக.,வை தாக்கி பேசி உள்ளார். விஜய்யின் இந்த பேச்சு திமுக.,வில் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்த போகிறது? அவர்களின் அடுத்த நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


விஜய் மாநாடு துவங்குவதற்கு முன், அவரது அரசியல் பயணம் வெற்றி அடைய வாழ்த்து சொன்ன துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், விஜய் பேசிய பிறகு கருத்து கேட்டதற்கு, தான் இதுவரை விஜய் பேசியதை கேட்கவில்லை. கேட்டு விட்டு பிறகு பதிலளிக்கிறேன் என சொல்லி நழுவி விட்டார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக காய்த்த மரம். ஆலமரம். எப்படிப்பட்ட விமர்சனங்களையும் தாங்கும் என மேலோட்டமாக பதிலளித்துள்ளார். மற்றபடி கட்சி தலைமை எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை.


விஜய் சொல்லியது போல் அவரை குழந்தை, அரசியலுக்கு புதியவர் என மிக சாதாரணமாக தான் அரசியல் கட்சிகள் அனைத்தும் எடை போட்டு வைத்திருந்திருக்கின்றன. அதனால் தான் யாரும் எதிர்பாராத விதமாக நெற்றியில் ஆணி அடித்தது போல், கில்லி போல சொல்லி அடித்த விஜய்யை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். திரையில் மட்டுமே விஜய்யை பார்த்து விட்டு, மேடையில் நிஜ ஹீரோ போல் சரமாரியாக வெளுத்து வாங்கிய விஜய் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். 


முன்கூட்டியே கணித்த திமுக




விஜய் இப்படி அதிரடி காட்டுவார் என்பதை திமுக தரப்பு முன்பே கணித்திருக்கக் கூடும். விஜய் அரசியலுக்கு வந்தால் இளைஞர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்று விடுவார்கள் என்பதை முன்பே சிந்தித்து தான், உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் பதவி கொடுத்து, இளைஞர்களின் முக்கியத்துவம் கட்சியில் அதிகரித்திருப்பதாக திமுக தலைமை தொண்டர்களை தங்கள் பக்கம் தக்க வைக்க முயற்சி மேற்கொண்டது. இருந்தும் விஜய் மாநாட்டிற்கு வந்த ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து பலரும் ஆடிப் போய் உள்ளனர்.


வழக்கமாக யார் விமர்சனம் செய்தாலும் அதற்கு உடனடியாக ஓடி வந்து கருத்து பதிவிடும், அறிக்கை வெளியிடும் திமுக பெரும் தலைவர்கல் விஜய் பேச்சிற்கு இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால் திமுக ஆதரவாளர்கள் பலர் சோஷியல் மீடியாவில் விஜய்க்கு பதில் சொல்ல துவங்கி விட்டனர்.


அதிமுக தரப்பிலிருந்து ஒரு காலத்தில் விஜய்க்கு நெருக்கடி வந்தபோது அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் திமுகவினர்தான் களமாடினர். ஆனால்  திமுக தனது முதல் எதிரி என்று விஜய் கூறியிருப்பதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இனி விஜய் விஷயத்தில் திமுக.,வின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? அறிக்கைகள், பேட்டிகள் மூலம் பதில் தருவார்களா? அல்லது அரசியல் வியூகம் அமைத்து தேர்தல் களத்தில் பதில் சொல்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்