உச்சத்தை உதறிவிட்டு .. உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கேன்.. நெகிழ்ந்த விஜய்.. உருகிப் போன ரசிகர்கள்

Meenakshi
Oct 28, 2024,10:19 AM IST

விக்கிரவாண்டி:  என்னோட கெரியரின் உச்சத்தை உதறிவிட்டு அந்த ஊதியத்தை உதறிவிட்டு, உங்கள் விஜயாக...  உங்களை மட்டும் நம்பி வந்திருக்கேன் என்று தவெக மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசியது அவரது ரசிகர்களையும், தவெக தொண்டர்களையும் நெகிழ வைத்துள்ளது. நாங்கள் நிச்சயமாக விஜய்யை கைவிட மாட்டோம். 2026ல் விஜய்யை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்போம் என்று மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்கள் உணர்ச்சிகரமாக கூறினர்.


தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக இருந்த நடிகர் விஜய், தற்பொழுது தவெக என்ற அரசியல் கட்சி தலைவராக உருவெடுத்துள்ளார். தவெக கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி வி.சாலையில்  நேற்று நடத்தி முடித்துள்ளார். இந்த மாநாட்டிற்கு 10 லட்சத்திற்கும் அதிகமானவர் வந்ததாக கூறப்படுகிறது. மாநாட்டில் விஜய் பேசுவதற்கு முன்பு வரை ஏகப்பட்ட குழப்பங்கள் ஓடிக் கொண்டிருந்தன.




கடுமையான வெயிலில் தொண்டர்கள் காத்துக் கிடந்தது சர்ச்சையானது, தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை வந்தது.. இடையில் ஆங்காங்கு சில விபத்துக்கள் அதில் 3 பேர் பலியானது.. என்று படபடப்பாகவே இருந்தது. ஆனால் விஜய் பேச ஆரம்பித்ததும் அத்தனை கஷ்டங்களையும் தொண்டர்கள், ரசிகர்கள் மறந்து விட்டனர். காரணம், அவர்கள் இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்து வந்த அந்த அதிரடி விஜய்யை நேரில் பார்த்தபோது பலரும் மெய் சிலிர்த்துப் போய் விட்டனர்.


விஜய் பேச்சின்போது தனக்கு நேர்ந்த சங்கடங்கள் குறித்தும் விவரித்தார். அவர் பேசும்போது, ஆரம்பத்தில் நான் நடிக்க வந்த போது எனக்கு மண்ட சரியில்ல, மூஞ்சி சரியில்ல, முடி சரியில்லனு சொல்லி ஒதுக்குனாங்க. அதுக்காக நான் பயப்படல. ஒவ்வொரு சூழலுக்காகவும் காத்திருந்து காத்திருந்து உழைத்து உழைத்துச் சுற்றிச் சுழன்று மேலே வந்தவன் நான் என்று சொன்னபோது ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டனர்.


ஒரு சாதாரண இளைஞனாக இருந்த விஜய். ஒரு நடிகனாக மாறினான். அந்த நடிகன் ஒரு வெற்றி பெற்ற நடிகனாக மாறினான். அவன் பொறுப்புள்ள மனிதனாக மாறினான். அந்த பொறுப்புள்ள மனிதன், ஒரு பொறுப்புள்ள தொண்டனாக மாறினான். இன்று பொறுப்பான தொண்டனாக இருக்கும் அவன் நாளைக்கு ... அதை நான் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன் என்று கூறியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.


இப்போது என்னை அரசியல் களத்திற்கு அழைத்து வந்திருக்கிறீர்கள் எப்போதும் போல ஓய்வின்றி உழைப்பேன். அதற்கான ரிசல்ட் உங்கள் ஓவ்வொருவரின் கை விரலில் இருக்கும் போது எனக்கென்ன கவலை . எல்லாமே நல்லவே ஒர்க் அவுட் ஆகும் பாருங்க. என்று கூறியபோது  தொண்டர்களின் குரல் அடங்க நெடு நேரம் ஆனது.


விஜய்யின் பேச்சு வழக்கமான பேச்சாக இல்லை. சாஃப்ட்டாக இல்லை.. தொடக்கம் முதல் முடியும் வரை பட்டாசு போல பொறிந்து தள்ளி விட்டார். அதேபோல வழக்கமாக கட்சி தலைவர்கள் என்னை ஜெயிக்க வைத்தால், நான் இதை செய்வேன். அதை செய்வேன் என்று கூறுவார்கள் அப்படி இல்லாமல், சிம்பிளாகவும், அதேசமயம் எல்லோருக்கும் போரடிக்காத வகையிலும் விஜய் பேசியதுதான் முக்கியமான ஹைலைட்.


விஜய் பேச்சிலேயே ரசிகர்களை அதிகம் தொட்டது, என்னுடைய உச்சத்தை விட்டு விட்டு உங்களுக்காக வந்து விட்டேன்.. உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கிறேன் என்று சொன்னுதான். திரைத் துறையில் வரலாறு காணாத உச்சத்தில் இருப்பவர் விஜய். அவரது படங்கள் சர்வ சாதாரணமாக 450 கோடி அளவுக்கு பிசினஸ் செய்கின்றன. அவருக்காக எவ்வளவு சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் இதை விட்டு விட்டுத்தான், முழுமையாக சினிமாவை விட்டு விட்டுத்தான் அரசியலுக்கு வருகிறார் விஜய்.


இதுவே ரசிகர்களை ஏற்கனவே நெகிழவைத்துள்ளது. இப்போது நேற்று விஜய் பேசிய பேச்சால் ரசிகர்கள் இன்னும் தீவிரமாக உணர்ச்சிவசப்பட்ட நிலைக்குப் போய் விட்டார்கள். அடுத்த ஆட்சி விஜய்தான் என்றும் அவர்கள் உறுதி பூண்டபடி மாநாட்டை முடித்துக் கொண்டு கிளம்பியுள்ளனர். இனி அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தும்போது, அவரது செயல்பாடுகள் மேலும் தெளிவாகும்போது ரசிகர்கள் மட்டுமல்லாமல், தொண்டர்கள் மட்டுமல்லாமல், மற்றவர்களையும் கூட விஜய் பக்கம் இழுக்க உதவும் என்று தவெகவினர் நம்புகிறார்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்