விழுப்புரத்தை வெளுத்தெடுத்த மழை.. தவெக மாநாடு வளாகம் சேறும் சகதியுமாக மாறியது!
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் பகுதிகளில் செய்து வரும் தொடர் மழை காரணமாக அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இந்த சேதத்தால் மாநாடு குறித்த நேரத்தில் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.அப்போது இக்கட்சிக்கு பெருமளவு ஆதரவும் எதிர்பார்ப்பும் எழுந்தது. இதனை தொடர்ந்து கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள், நிர்வாகிகள் நியமனம், கட்சிக் கொடி மற்றும் பாடல் வெளியீடு என அடுத்தடுத்து பணிகளை சிறப்பாக செய்து வந்தார் தவெக தலைவர் விஜய்.
விஜய் செய்த அனைத்து கட்சி வளர்ச்சிப் பணிகளும் மக்களை வெகுவாக கவர்ந்தது.இதனை தொடர்ந்து கட்சியை உயர்த்தும் நோக்கில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள வி சாலை கிராமத்தில் வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதற்காக விஜய் ரசிகர்கள் தொண்டர்கள் நிர்வாகிகள் என பலரும் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த தவெக சார்பாக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா அந்த அக்டோபர் 4ஆம் தேதி விக்கிரவாண்டி, வி.சாலை கிராமத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் திரண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களால் அத்தனை அரசியல் கட்சிகளும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் இது கட்சி மாநாட்டின் பந்தக்கால் விழாவா அல்லது மினி மாநாடு என அனைவரும் மிரட்சி அடைந்தனர். அதேபோல் மாநாடு பந்தக்கால் விழாவிற்கு இவ்வளவு கூட்டம் என்றால் மாநாட்டிற்கு எவ்வளவு கூட்டம் வரும் என அனைவரும் வியந்தனர்.
இந்த நிலையில் தற்போது தென்கிழக்கு வங்க கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு தினங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழக நோக்கி நகர உள்ளது.இதன் காரணமாக வட கடலோர பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நாகப்பட்டினம், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து நேற்று இரவு முதல் தற்போது வரை கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குறிப்பாக விஜய் மாநாடு நடத்தும் பகுதிகளில் பெய்த கன மழை எதிரொலியால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இனால் மாநாடு நடக்கும் இடத்தில் நடந்து வந்த பணிகள் தாமதமாகியுள்ளன.
மழை பெய்து முடிந்த பின்னர், மைதானத்தை சரி செய்து அதன் பின்னர் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மழையால் தவெக மாநாடு நடைபெறும் இடங்கள் சேதமான நிலையில், இப்பகுதிகளில் விரைந்து பணிகளை முடித்து மாநாடு அறிவித்த நேரத்தில் நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்