2026 சட்டசபைத் தேர்தல்: 5 முனைப் போட்டி.. யார் யார் சேருவாங்க.. சிதறப் போகும் வாக்குகள் யாரோடது?
சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் கடும் அனல் பறக்கும் என்பது இப்போதே தெரிந்து விட்டது. கேப்டன் விஜயகாந்த்துக்குப் பிறகு ஒரு திரைப்பட நடிகர் அனல் பரப்பும் வகையில் அரசியல் களம் புகுந்துள்ளதால், வரப் போகும் சட்டசபைத் தேர்தல் களம் அசாதாரணமாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூற ஆரம்பித்து விட்டனர்.
கடந்த தேர்தல் வரை திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டிதான் நிலவி வந்தது. இப்போது கூடுதலாக தமிழக வெற்றிக் கழகம் என்ட்ரி ஆகியுள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக த.வெ.க தலைவர் விஜய் அறிவித்து விட்டார். நேற்று நடந்த முதல் மாநில மாநாட்டில் பல்வேறு சிக்னல்களையும் அவர் கொடுத்து விட்டுப் போயுள்ளார். இதனால் அரசியல் களம் களேபரமாகியுள்ளது.
விஜய்யின் வருகையையும், நேற்று அவருக்காக கூடிய கூட்டத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக திமுக அதை சாதாரணமாக நிச்சயமா கருதாது. எப்போதுமே பிற கட்சிகளை விட விவேகமாக செயல்படக் கூடிய கட்சி திமுக. ஒவ்வொரு போட்டியாளரையும் அது சீரியஸாக எடுத்துக் கொள்ளும். வெளியில் ஆயிரம் பேசுவார்கள்.. ஆனால் உள்ளுக்குள் திமுக தெள்ளத் தெளிவாக திட்டமிடும். வியூகங்களை வகுக்கும்.
விஜயகாந்த் முதல் முறையாக கூட்டணி சேர முடிவெடுத்தபோது, தனது இமேஜ் உள்ளிட்ட எல்லாவற்றையும் தூக்கி வைத்து விட்டு அவரை கூட்டணிக்குள் இழுக்க மறைந்த கலைஞர் கருணாநிதி தீவிரமாக இறங்கினார். விஜயகாந்த்தால் ஏற்படும் பாதிப்புகளை கண்டவர் அவர். கடைசி வரை காத்திருந்தார். விடாமல் பேசவும் செய்தனர். ஆனால் விஜயகாந்த் தடம் மாறி அதிமுகவுக்குப் போனார்.. அதன் விளைவுகளை சீக்கிரமே விஜயகாந்த் சந்திக்கவும் நேரிட்டது.
எதிரி யாராக இருந்தாலும் அவர்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதில் திமுக தெளிவாகவே இருக்கும். அந்த வகையில் விஜய்யையும் அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். காரணம், விக்கிரவாண்டியில் கூடிய கூட்டம், விஜயகாந்த்துக்கு அடுத்து கூடிய மிகப் பெரிய மக்கள் கூட்டம் என்பதால் திமுக சற்று யோசித்தே களமாடும்.
வரப் போகும் சட்டசபைத் தேர்தலில் யார் யாருடன் கூட்டணி சேருவார்கள் என்பதில் பெரிய குழப்பம் இருக்கப் போவதில்லை. அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கூட்டணிகளாக திமுக, தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிகளாகத்தான் இருக்கும். இதில் திமுக கூட்டணியில் என்ன மாதிரியான மாற்றம் இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. அதேபோல கூட்டணிக்கு ரெடி என்று விஜய் அறிவித்திருப்பதால், அவருடன் கூட்டணி சேரப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
5 முனைக் கூட்டணியாக உருவெடுத்திருப்பதால் வாக்குகள் கணிசமாக பிரியும்.. இதில் யார் யாரிடமிருந்து வாக்குகள் விஜய் பக்கம் போகப் போகிறது என்பது ஒரு எதிர்பார்ப்பு. புதிய வாக்காளர்களின் வாக்குகளை விஜய் அதிகம் கவருவாரா என்பது இன்னொரு எதிர்பார்ப்பு.. விஜய் ரசிகர்கள் அத்தனை பேரும் விஜய் கட்சிக்கே வாக்களிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு மறுபக்கம். ஆக கூட்டணிகளின் வடிவம் மற்றும் பலம் ஆகியவற்றைப் பொறுத்தே அடுத்த தேர்தலில் வெற்றி கட்சிகளுக்கு வாய்க்கக் கூடும்.
கடந்த காலங்களில் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் பெற்ற வாக்குகளைப் பார்க்கலாம்.
2014 லோக்சபா தேர்தல்
அதிமுக கூட்டணி - 44.92 சதவீத வாக்குகள்
திமுக கூட்டணி - 27.18 சதவீத வாக்குகள்.
பாஜக கூட்டணி - 18.80 சதவீத வாக்குகள்
காங்கிரஸ் - 4.37 சதவீத வாக்குகள்
இடதுசாரி கூட்டணி - 1.10 சதவீத வாக்குகள்
2019 லோக்சபா
திமுக கூட்டணி (மொத்தம் 9 கட்சிகள்) - 53.29 சதவீத வாக்குகள்
அதிமுக கூட்டணி - (5 கட்சிகள்) - 31.05 சதவீத வாக்குகள்.
நாம் தமிழர் கட்சி - 3.90 சதவீத வாக்குகள்
மக்கள் நீதி மய்யம் - 3.67 சதவீத வாக்குகள்.
2024 லோக்சபா தேர்தல்
திமுக கூட்டணி - (7 கட்சிகள்) - 46.97 சதவீத வாக்குகள்.
அதிமுக கூட்டணி- (3 கட்சிகள்) - 23.05 சதவீத வாக்குகள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி - (5 கட்சிகள்) - 18.28 சதவீத வாக்குகள்
நாம் தமிழர் கட்சி - 8.20 சதவீத வாக்குகள்
கடந்த 2024 லோக்சபா தேர்தலுக்குப் பிறகுதான் நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி அந்தஸ்தை எட்டியது. அக்கட்சி தொடங்கியது முதல் தனித்தே போட்டியிட்டு வருகிறது. தனது முதல் தேர்தலை 2016ல் சந்தித்த மக்கள் நீதி மய்யம், 2வது தேர்தலாக 2021 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் 3வது தேர்தலான 2024 லோக்சபா தேர்தலில் அது போட்டியிடவில்லை. மாறாக திமுக கூட்டணியில் இணைந்து ராஜ்யசபா சீட்டை மட்டும் பெற்று ஒதுங்கி விட்டது. சட்டசபைத் தேர்தல் வாக்கு சதவீத நிலவரங்களைப் பார்ப்போம்:
2011 சட்டசபைத் தேர்தல் முடிவுகள்
அதிமுக கூட்டணி (11 கட்சிகள்) - 51.9 சதவீதம்
திமுக கூட்டணி (8 கட்சிகள்) - 39.5 சதவீதம்
பாஜக கூட்டணி (3) - 8.5 சதவீதம்
2016 சட்டசபைத் தேர்தல் முடிவுகள்
அதிமுக கூட்டணி (7 கட்சிகள்) - 40.88 சதவீத வாக்குகள்
திமுக கூட்டணி (8 கட்சிகள்) - 39.85 சதவீத வாக்குகள்
பாஜக கூட்டணி (3) - 2.86 சதவீத வாக்குகள்
மக்கள் நலக் கூட்டணி (6) - 6.1 சதவீத வாக்குகள்
நாம் தமிழர் கட்சி - 1.07 சதவீத வாக்குகள்
2021 சட்டசபைத் தேர்தல் முடிவுகள்
திமுக (13 கட்சிகள் ) - 45.38 சதவீதம்
அதிமுக + பாஜக - (10 கட்சிகள்) - 39.71 சதவீதம்
மக்கள் முன்னணி (4 கட்சிகள்) - 3 சதவீதம்
மக்கள் நீதி மய்யம் (7 கட்சிகள்) - 2.75 சதவீதம்
நாம் தமிழர் கட்சி - 6.58
கடந்த 2016 சட்டசபைத் தேர்தலை விட 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியின் பலம் பெருகியுள்ளது. அதிமுகவின் பலம் குறைந்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் பலம் பெருகியுள்ளது. அதேசமயம், 2021 சட்டசபைத் தேர்தலுடன் 2024 லோக்சபா தேர்தல் முடிவை ஒப்பிட்டுப் பார்த்தால், அதிமுகவின் பலம் வெகுவாக சரிந்துள்ளது. திமுகவின் பலம் பெரிதாக அதிகரிக்கவில்லை. மாறாக கிட்டத்தட்ட 2 சதவீத அளவுக்குத்தான் உயர்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனது பலத்தை அதிகரித்தே வந்துள்ளது.
வரும் சட்டசபைத் தேர்தலில் விஜய் கட்சியுடன் பெரிய கட்சிகள் அதாவது விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் போன்றவை இணைந்தால் இந்த வாக்கு சதவீத கணக்கில் சற்று மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. மாறாக தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் நிலை வந்தால் அது பிரிக்கப் போகும் வாக்கு யாருடையதாக இருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்