தவெக தொண்டர்களின் கண்கள் வி. சாலையை நோக்கி.. மாநாடு பந்தக்கால் விழா.. விஜய் பங்கேற்பு?
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை கிராமத்தில் அக்டோபர் 4ம் தேதி பந்தக்கால் நடும் விழாவிற்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் காணொளி வாயிலாக பங்கேற்க வாய்ப்புள்ளது என தவெக தலைமை தரப்பில் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரியில் கட்சி ஆரம்பித்தார் விஜய். இதனையடுத்து கட்சி கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்து வைத்தார். கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்ட அன்றே கொடி குறித்த எதிர்ப்புகள் கிளம்பி விட்டன. விஜய்யின் கட்சிக் கொடியில் இடம் பெற்று இருந்த யானை சின்னம், தங்கள் கட்சியின் சின்னம் என பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. யானை சின்னத்தை நீக்காவிட்டால் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்போவதாக கூறியிருந்த பகுஜன் சமாஜ் கட்சி இது தொடர்பாக புகாரும் தேர்தல் ஆணையத்திடம் அளித்தது.
ஆனால் தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. அரசியல் கட்சிக்கொடியில் இடம் பெறும் சின்னங்களுக்கு நாங்கள் ஒப்புதலோ, அங்கிகாரமோ வழங்குவது இல்லை. கொடிகளை உருவாக்கும் கட்சிகளே, பிற கட்சிகளின் சின்னம் உள்ளிட்டவை தங்களது கொடியில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.
இந்நிலையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் கட்சித் தலைவர் விஜய் விறுவிறுப்பாக செய்து வருகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தவெக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்து வந்தது. கட்சி நிர்வாகிகளுக்கும் தவெக பொதுச்செயலாளர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று கட்சி நிர்வாகிகளை பார்த்து அழைப்பிதழை வழங்கி வந்தார்.
மாநாடு நிகழ்ச்சிக்கான பந்தல் கால் நடும் விழா நாளை காலை 4 மணி முதல் 6 மணிக்குள் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால் விஜய் வந்தால் அவரைக் காண பெரும் கூட்டம் திரண்டு விடும். அதுவே மினி மாநாடு போல மாறி விடும் என்பதாலும், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் வரும் என்பதாலும் அதைத் தவிர்க்கிறதாம் தவெக தலைமை.
விக்கிரவாண்டியில் நாளை அதிகாலை நடைபெறவுள்ள த.வெ.க மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழாவில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. விஜய் பங்கேற்கிறார் என வெளியாகும் செய்தி தவறானது. அவர் காணொளி மூலம் மட்டுமே பங்கேற்க வாய்ப்புள்ளது என த.வெ.க தலைமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்