Tvk மாநாடு 2024 .. சென்னையிலிருந்து சைக்கிள் பேரணி.. தொடங்கி வைத்தார் நடிகர் சௌந்தர் ராஜா!
சென்னை: விஜயின் தீவிர ரசிகரான நடிகர் சௌந்தரராஜா தவெக மாநாடு நடைபெறும் வி சாலை நோக்கி சைக்கிள் பேரணியை தொடங்கியுள்ளார். வழி நெடுகிலும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் நாளை முதலாவது மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் ஒரு விதமான எதிர்பார்ப்பு நிலவுகிறது. திரையுலகிலும் கூட அத்தனை பேரின் பார்வையும் விஜய் மீது படிந்துள்ளது. அந்த வகையில் நடிகர் செளந்தரராஜா தொடர்ந்து தீவிரமாக தவெகவுக்காக செயல்பட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் சௌந்தர்ராஜா. இவர் சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி, தர்மதுரை, பூஜை ,றெக்க, கத்தி சண்டை, பிகில் என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இவரின் நடிப்பிற்காக பாராட்டு பெற்றவர். சினிமா மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலரான சௌந்தரராஜா இயற்கை வளத்தை மேம்படுத்தும் வகையில் ஏராளமான மரங்களையும் நட்டு வருகிறார்.
விஜய்யுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்த பிறகு, விஜய்க்கு நெருக்கமான தோழரானார் சௌந்தர்ராஜா. கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி விஜய் கட்சி ஆரம்பத்திலிருந்து பல்வேறு நடவடிக்கைகளில் சவுந்தர்ராஜா ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகப் பெயர் அறிவிக்கப்பட்டு, கட்சிக்கொடி அறிமுகம் செய்யப்பட்ட மறுநாளே கழகக் கொடியுடன் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜையும் வழிபாடும் நடத்தினார். மேலும் தொலைக்காட்சிகளில் கட்சி தொடர்பாக பல்வேறு விவாதங்களையும் முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை விக்ரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக நடிகர் சௌந்தர் ராஜா மற்றும் அவர் நடத்திவரும் மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற அறக்கட்டளை சார்பில் சைக்கிள் பேரணியை தொடங்கி உள்ளார். இந்த பேரணி சென்னையில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி தற்போது புறப்பட்டுள்ளது.
சௌந்தர்ராஜா தலைமையில் சென்னையிலிருந்து விக்ரவாண்டிக்கு சைக்கிளிலேயே 250 பேர் பேரணியாக சென்று தவெக மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். சைக்கிள் பேரணி மேற்கொள்ளும் வழி நெடுகிலும் மரக்கன்றுகளை நடவும் மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்