துருக்கி நிலநடுக்கம்.. இடிபாடுகளில் சிக்கிய.. 6 வயது சிறுமியை மீட்ட.. இந்தியக் குழு!

Su.tha Arivalagan
Feb 10, 2023,04:18 PM IST
டெல்லி: துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக அங்கு முகாமிட்டுள்ள இந்தியக் குழுவினர் 6 வயது சிறுமியை இடிபாடுகளிலிருந்து மீட்டுள்ளனர். அந்தக் குழந்தையை மிகுந்த ஜாக்கிரதையாக இந்தியக் குழுவினர் மீட்ட விதம் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.



மிகவும் சிக்கலான இடத்தில் அந்த சிறுமி சிக்கியிருந்தார். அவரது கழுத்து பாதிக்கப்படும் அபாயமும் இருந்தது. இருப்பினும் இந்திய மீட்புப் படையினர் மிகுந்த கவனத்துடன் குழந்தைக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் பத்திரமாக மீட்டனர். உடனடியாக அந்த குழந்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள்தான் தற்போது துருக்கியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் நிலநடுக்கங்களால் துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா பல்வேறு வகையான நிவாரண உதவிகளை அளித்துள்ளது. கூடவே மீட்புப் படையினரையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

கஸியான்டெப் என்ற பகுதியில் உள்ள நுர்தகி என்ற இடத்தில் இந்த சிறுமி மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 51 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் துருக்கி சென்றனர். ஏற்கனவே இது போல 2 குழுவினர் துருக்கியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.