அமமுக பொதுச் செயலாளராக.. மீண்டும் டிடிவி தினகரன் தேர்வு

Su.tha Arivalagan
Aug 06, 2023,03:48 PM IST
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் தினகரன். பெரியகுளம் எம்.பியாக இருந்துள்ளார். பின்னர் ஜெயலலிதாவின் கடைசிக்காலத்தில் தினகரன் கட்சியை விட்டு நீக்கப்பட்டு, ஜெயலலிதாவின் நம்பிக்கை வளையத்திலிருந்தும் விலக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா குடும்பத்தினர் ஒன்றிணைந்தனர். அவருடன் இணைந்து தினகரன் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். சசிகலாவை முதல்வராக்க இவர்கள் திட்டமிட்டனர். அதற்கு இடையூறாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்பதால் அவர் நிர்பந்தப்படுத்தப்பட்டு பதவியிலிருந்து விலகினார்.

இதனால் எம்.எல்.ஏக்கள் இரு குரூப்களாக பிரிந்தனர். ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏக்கள் தனியாக வந்தனர். மறுபக்கம் சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் பாதுகாத்து வைத்தார். இந்த நிலையில்தான் அவருக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிறைக்குப் போய்விட்டார். 



சிறைக்குப் போகும் முன்பு அவர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி விட்டுப் போனார். எடப்பாடி முதல்வரான பின்னர் தினகரன் உள்ளிட்டோர் ஒதுக்கப்பட்டனர். அதன் பின்னர் காலப்போக்கில் எடப்பாடி பழனிச்சாமியும் - ஓபிஎஸ்ஸும் கை கோர்த்தனர். அதிமுகவைக் கைப்பற்ற என்னென்னவோ செய்து பார்த்தார் தினகரன். எதுவும் சரிப்படவில்லை. இதனால் அமமுக கட்சியை தோற்றுவித்து அதை நடத்தி வருகிறார்.

2018ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட அமமுக கட்சி இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் பெரிய பாதிப்பு அல்லது தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலில் இக்கட்சி  போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது. ஒரு இடத்திலும் வெல்லவில்லை. லோக்சபாதேர்தலில் 30 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியைத் தழுவியது. சட்டசபைத் தேர்தலில் கிட்டத்தட்ட 2.50 சதவீத அளவுக்கு வாக்குகளைப் பெற்றது. ஆனால் லோக்சபா தேர்தலில் இது 0.55 சதவீதமாக மட்டுமே இருந்தது. இருப்பினும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் சக்தியாக அமமுக வெளிப்பட்டது.

2022ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 3 மாநகராட்சி வார்டுகள், 33 நகராட்சி வார்டுகள், 66 டவுன் பஞ்சாயத்து வார்டுகள் ஆகியவற்றில் அமமுக வெற்றி பெற்றது. அதேபோல ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அமமுகவுக்கு 94 பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் வெற்றி கிடைத்தது.

இந்த நிலையில் அமமுகவின் பொதுக் குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டார். கட்சித் தலைவராக சி.கோபாலும்,  துணைத் தலைவராக அன்பழகன் ஆகியோரும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.