கோமியத்தில் வாய் கொப்பளிச்சுட்டு பேசுங்க.. அதிர வைத்த அமைச்சர்!

Su.tha Arivalagan
Jan 17, 2023,11:09 AM IST
அகர்தலா:  ஜனநாயகம் பற்றிப் பேச எதிர்க்கட்சிகளுக்குத் தகுதி இல்லை. அப்படிப் பேசுவதாக இருந்தால் முதலில் கோமியத்தில் வாய் கொப்பளித்து விட்டுப் பேசட்டும் என்று திரிபுரா சட்ட அமைச்சர் ரத்தன் லால் நாத் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.



திரிபுரா மாநில சட்ட அமைச்சராக இருப்பவர் ரத்தன்லால்நாத். இவர் 34 வருட காலம் காங்கிரஸில் இருந்தவர். கடந்த 2017ம் ஆண்டு பாஜகவில் இணைந்தவர். தற்போது அந்த மாநில பாஜக அரசில் அமைச்சராக இருக்கிறார்.

இவர் சிபிஎம், காங்கிரஸ் குறித்து நேற்று பேசும்போது சர்ச்சையான வகையில் பேசினார். அவர் கூறுகையில்,  வருகிற சட்டசபைத் தேர்தலுக்காக சிபிஎம்மும், காங்கிரஸும் தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளவுள்ளன. இவர்களுக்கு ஜனநாயகம் குறித்துப் பேச தகுதி இல்லை. அப்படிப் பேசுவதாக இருந்தால் முதலில் கோமியத்தில் வாய் கொப்பளித்து விட்டுப் பேசட்டும். கடந்த ஆட்சிக்காலங்களில் இவர்கள் திரிபுராவுக்கு என்ன செய்தார்கள்.. வன்முறையை வளர்த்தார்கள்,ஸ்திரமின்மையை கட்டிக் காத்தார்கள் என்றார் அவர்.

இவரது இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சிபிஎம் பொதுச் செயலாளர் ஜிதேந்திர செளத்ரி கூறுகையில், ஜனநாயகம் குறித்துப் பேசினால், தினசரி கோமியம் குடிப்பவர்களுக்குக் கோபம் வரத்தான் செய்யும் என்றார் அவர் காட்டமாக.