சீன நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு: தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தப்படும்: மா.சுப்பிரமணியன்

Meenakshi
Sep 03, 2024,02:51 PM IST

திருச்சி : சீன நூடுல்ஸ் சாப்பிட்ட 15 வயது சிறுமி உயிரிழப்பை அடுத்து, தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் பகுதியில் உள்ள அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ். இவரது 15 வயது மகள் ஸ்டெஃபி ஜாக்லின் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்டெஃபி ஜாக்லின் ஒரு நூடுல்ஸ் பிரியை. அதனால் அடிக்கடி நூடுல்ஸ் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். அப்படி தான் கடந்த செப்டம்பர் 1ம் தேதியும் இரவு ஆன்லைனில் சைனிஸ் நூடுல்ஸ் ஆர்டர் செய்து ஸ்டெஃபி ஜாக்லின் சமைத்து சாப்பிட்டு படுத்துள்ளார்.




சாப்பிட்டு முடித்து தூங்கப் போன பிறகு, வெகு நேரம் ஆகியும் ஸ்டெஃபி ஜாக்லின் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே ஸ்டெஃபி ஜாக்லினை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் முன்னரே இறந்து விட்டார் எனத் தெரிவித்தார். இதனால் ஸ்டெஃபி ஜாக்லின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்ட நூடுல்ஸ்சால் தான் சிறுமி உயர் இழந்ததாக தகவல் பரவியதை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இந்நிலையில் இன்று திருச்சி வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமேசானில் விற்கப்படும் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட 15 வயது சிறுமி உயிரிழப்பு வேதனை அளிக்கின்றது. சைனா நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் இருந்து காலாவதியான 800 கிலோ உணவுப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர். தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்